13 அம்சக் கோரிக்கைகளை அடியோடு நிராகரிக்கிறேன்! – தமிழ்க் கட்சிகளின் ஆதரவில்லாமல் தமிழரின் வாக்குகளை அள்ளுவேன் என்கிறார் கோட்டா

“தமிழ்க் கட்சிகள் முன்வைத்துள்ள 13 அம்சக் கோரிக்கைகளையும் ஒருபோதும் நிறைவேற்ற முடியாது. அவற்றை நான் அடியோடு நிராகரிக்கின்றேன். அந்தக் கோரிக்கைகளை முன்வைத்தால், அவர்களுடன் பேச்சு நடத்தவும் நான் தயாரில்லை. தமிழ்க் கட்சிகளின் ஆதரவில்லாமல், தமிழ் மக்களின் வாக்குகளை நான் பெற்றுக் கொள்வேன்.”

– இவ்வாறு மஹிந்த ராஜபக்ச தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

சர்வதேச ஊடகம் ஒன்றின் கொழும்புச் செய்தியாளருக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலை தமிழ் மக்கள் ஓரணியில் எதிர்கொள்வதற்காக, தமிழ்த் தேசியக் கட்சிகள் இடையே பொது இணக்கப்பாட்டை ஏற்படுத்தும் முயற்சி யாழ்ப்பாணம் மற்றும் கிழக்கு பல்கலைக்கழகங்களின் மாணவர் ஒன்றியங்களால் முன்னெடுக்கப்பட்டிருந்தது. 5 தமிழ்க் கட்சிகள் பொது ஆவணத்தில் கையெழுத்திட்டுள்ளன. 13அம்சக் கோரிக்கைகள் அந்தப் பொது ஆவணத்தில் முன்வைக்கப்பட்டுள்ளன. ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுடன் இந்த ஆவணத்தை முன்வைத்துப் பேசுவதற்குத் தீர்மானிக்கப்பட்டிருந்தது.

இந்த விடயம் தொடர்பில் கோட்டாபயவிடம் கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் மேலும் தெரிவித்துள்ளதாவது:-

“ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு 5 தமிழ்க் கட்சிகள் இணைந்து பொது ஆவணத்தை தயாரித்துள்ளதாக அறிகின்றேன். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட தமிழ்க் கட்சிகளுடன் பேச்சு நடத்துவதற்குத் தயாராகவுள்ளேன். ஆனால், அவர்கள் தரப்பால் முன்வைக்கப்பட்டுள்ள 13 கோரிக்கைகளை அடியோடு நிராகரிக்கின்றேன். அதை முன்வைத்து அவர்கள் பேச்சு நடத்த முன்வந்தால், நான் அவர்களுடன் பேசுவதற்குத் தயாரில்லை.

தமிழ்க் கட்சிகள் எனக்கு ஆதரவு வழங்காவிட்டாலும், தமிழ் மக்களின் வாக்குகளைப் பெற்றுக் கொள்வேன். அதற்காக தமிழ்க் கட்சிகளின் ஆதரவு தேவையில்லை என்று சொல்லவில்லை. அவர்கள் முன்வைத்த விடயங்கள் பாரதூரமானவை” – என்று குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *