காலம் கனிந்துவிட்டது! கரம்கோர்க்கத் தயார்!! – சஜித்தின் அழைப்பை ஏற்றார் திஸ்ஸ

ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராகக் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படும் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாஸவால் விடுக்கப்பட்ட அழைப்பை அக்கட்சியின் முன்னாள் பொதுச்செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க ஏற்றுள்ளார்.

நாட்டைக் கட்டியெழுப்புவதற்காகத் தன்னுடன் இணைந்து செயற்பட முன்வருமாறு ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து வெளியேறிய உறுப்பினர்களுக்கு சஜித் பிரேமதாஸ நேற்று அழைப்பு விடுத்திருந்தார்.

இதற்குப் பதிலளிக்கும் வகையில் திஸ்ஸ அத்தநாயக்கவால், சஜித் பிரேமதாஸவுக்கு இன்று அனுப்பிவைக்கப்பட்டுள்ள கடிதத்தில்,

“பல்வேறு காரணங்களால், ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்பாட்டு அரசியலிலிருந்து ஒதுங்கியிருக்கும் உறுப்பினர்களை மீண்டும் கட்சியுடன் இணையுமாறு நீங்கள் (சஜித் பிரேமதாஸ) விடுத்துள்ள அழைப்பு வரவேற்கத்தக்க விடயமாகும்.

குறித்த கோரிக்கையில் எனது பெயரையும் விளித்திருந்தீர்கள். அது குறித்து ஆழமாகச் சிந்தித்தேன். உங்கள் அழைப்பை ஏற்று இன்று முதல் கட்சியில் இணைந்து செயற்படும் முடிவை எடுத்துள்ளேன்.

2015இல் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் வேட்பாளர் ஒருவருக்கு வெற்றிபெறுவதற்கான சூழ்நிலை இருந்தும், அந்த வாய்ப்பை நழுவவிட்டதாலேயே கட்சியிலிருந்து விலகிச் செயற்பட வேண்டிய நிலை எனக்கு ஏற்பட்டது.

ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் ஜனாதிபதி வேட்பாளர் ஒருவரைக் களமிறக்கி வெற்றிபெற வைக்கும் எனது நோக்கம் நிறைவேறும் வாய்ப்பு தற்போது உருவாகியுள்ளதால் உங்களுடன் கரம் கோர்த்துச் செயற்படத் தயார்” – என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த 2015ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளராகப் பதவி வகித்திருந்த மைத்திரிபால சிறிசேன, அக்கட்சியிலிருந்து வெளியேறி ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவுடன் மஹிந்த ராஜபக்சவை எதிர்த்து வேட்பாளராகக் களமிறங்கிய வேளை, ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளராகப் பதவி வகித்திருந்த திஸ்ஸ அத்தநாயக்க, அக்கட்சியிலிருந்து வெளியேறி மஹிந்த ராஜபக்சவுக்கு ஆதரவு வழங்கிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *