சஜித்தைக் களமிறக்க ரணில் பச்சைக்கொடி! – நிபந்தனைகளும் விதிப்பு

ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரான சஜித் பிரேமதாஸவை எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராகக் களமிறக்க நிபந்தனைகளை விதித்துப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இணக்கம் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியாகத் தெரிவானால் ஆறு மாதங்களுக்குள் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ஒழிக்க வேண்டும், புதிய ஆட்சியிலும் ரணிலைப் பிரதமராகவும் 2024ஆம் ஆண்டுவரை கட்சித் தலைவராகவும் இருக்க அனுமதிக்க வேண்டும், கட்சியிலும் ஆட்சியிலும் உயர் பதவிகள் கரு ஜயசூரியவுக்கு வழங்க வேண்டும், இனப்பிரச்சினைக்கு அதிகாரப் பகிர்வுடன் தீர்வை முன்வைக்க வேண்டும், மரணதண்டனை அமுலாக்கத்தை இரத்துச் செய்தல் வேண்டும் போன்ற நிபந்தனைகளையே சஜித்திடம் ரணில் முன்வைத்துள்ளார்.

இந்த நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ளும் நிலைமைக்கு சஜித் வந்துள்ளார் என அறியமுடிந்தது.

ரணில் விக்கிரமசிங்க, சஜித் பிரேமதாச, கரு ஜயசூரிய ஆகியோருக்கு இடையே நேற்று முக்கிய சந்திப்பு நடைபெற்றுள்ளது.  ஐ.தே.கவின் ஜனாதிபதி வேட்பாளரைத் தெரிவு செய்வது தொடர்பான இறுதி இணக்கப்பாட்டை ஏற்படுத்திக்கொள்வதற்காகவே இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இதன்போது நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை முற்றாக ஒழிக்கப்படும் என்றால் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் அவசியம் எனக்கு இல்லை என்று ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

இந்தச் சந்திப்பில்தான் மேற்படி நிபந்தனைகளுடன் சஜித்தை வேட்பாளராகக் களமிறக்க ரணில் இணக்கம் தெரிவித்துள்ளார் எனத் தெரியவந்தது.

இதற்கான அங்கீகாரம் நாளை வியாழக்கிழமை கூடவுள்ள கட்சியின் மத்திய செயற்குழுவில் பெறப்படும் என்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

நேற்றிரவு ஐ.தே.கவின் சிரேஷ்ட அமைச்சர்களுடனும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கலந்துரையாடியுள்ளார். அதில் ரணில் ஆதரவு, சஜித் ஆதரவு அணிகளைச் சேர்ந்தவர்கள் கலந்துகொண்டனர். அதிலும் சஜித்தை ஜனாதிபதி வேட்பாளராகக் களமிறக்க மேற்படி நிபந்தனைகளுடன் ரணில் இணக்கம் தெரிவித்துள்ளார் என்றும் அறியமுடிந்தது.

ரணிலின் இந்த முடிவுக்கு அவரது ஆதரவு தரப்பினரும் இணக்கம் தெரிவித்துள்ளனர் எனவும் தெரியவந்தது.

எனவே, ரணில் விதித்துள்ள நிபந்தனைகளை அமுலாக்க சஜித் உத்தரவாதம் அளித்தால் நாளை நடைபெறவுள்ள ஐ.தே.கவின் மத்திய செயற்குழுக் கூட்டத்தில் ஜனாதிபதி வேட்பாளராக அவர் பெயரிடப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *