நான் நிபந்தனைகளுக்கு அடிபணியவேமாட்டேன்! – சஜித் சூளுரை

“ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராகக் களமிறங்குவதற்கு ஒருபோதும் நிபந்தனைகளுக்கு அடிபணியமாட்டேன். மனச்சாட்சியின் பிரகாரம் மக்களுக்கான அரசியலையே முன்னெடுப்பேன். எவரினதும் கைப்பாவையாகச் செயற்படவும் மாட்டேன்.”

– இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரான அமைச்சர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

மத்துகமையில் இன்று (25) மாலை நடைபெற்ற மக்கள் பேரணியில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:-

“நிபந்தனைகளின் அடிப்படையிலேயே எனக்கு ஜனாதிபதி வேட்பாளர் பதவி வழங்கப்படவுள்ளது என இன்று காலை ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. நான் எவரினதும் கைப்பாவை கிடையாது. அதேபோல் பதவிகளுக்காக நிபந்தனைகளை ஏற்று அரசியல் நடத்தியதும் இல்லை.

மனச்சாட்சியின் பிரகாரம் மக்களுக்கான அரசியலையே முன்னெடுத்து வருகின்றேன். பதவிகளைவிட சுயகௌரவமும், நாடுமே எனக்கு முக்கியம் என்பதால் ஒருபோதும் நிபந்தனைகளுக்கு அடிபணியமாட்டேன் என்பதைத் தெளிவாகக் கூறிவைக்க விரும்புகின்றேன்.

பல சவால்களை எதிர்கொண்டு முற்கள் நிறைந்த பாதையிலேயே பயணித்துக்கொண்டிருக்கின்றேன். இறுதிநேரத்தில் துரோகம் இழைக்கப்பட்டால்கூட எனது பயணம் தடைப்படாது. செல்ல வேண்டிய இடத்துக்கு நிச்சயம் செல்வேன். மக்கள் வழங்கும் ஆணையை உயிரிலும் மேலானதாகக் கருதிச் செயற்படுவேன்.

அதேவேளை, தற்போதைய அரசமைப்பில் உள்ளவாறு பௌத்த மதத்துக்கு முன்னுரிமை வழங்கப்படும். அனைத்து விகாரைகளும் அபிவிருத்தி செய்யப்படும். அதேபோல் ஏனைய மதங்களையும் பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

முப்படையினரைக் கடவுளாகவே பார்க்கின்றேன். அவர்களுக்கான நலன்புரிச் சேவைகளுக்கு எல்லைகளை வகுக்க முடியாது” – என்றார்.

சஜித் பிரேமதாஸவை எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஐ.தே.கவின் வேட்பாளராகக் களமிறக்க நிபந்தனைகளை விதித்துப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இணக்கம் தெரிவித்துள்ளார். ஜனாதிபதியாகத் தெரிவானால் ஆறு மாதங்களுக்குள் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ஒழிக்க வேண்டும், புதிய ஆட்சியிலும் ரணிலைப் பிரதமராகவும் 2024ஆம் ஆண்டுவரை கட்சித் தலைவராகவும் இருக்க அனுமதிக்க வேண்டும், கட்சியிலும் ஆட்சியிலும் உயர் பதவிகள் கரு ஜயசூரியவுக்கு வழங்க வேண்டும், இனப்பிரச்சினைக்கு அதிகாரப் பகிர்வுடன் தீர்வை முன்வைக்க வேண்டும், மரணதண்டனை அமுலாக்கத்தை இரத்துச் செய்தல் வேண்டும் போன்ற நிபந்தனைகளையே சஜித்திடம் ரணில் முன்வைத்துள்ளார் என்று செய்திகள் வெளியாகியிருந்த நிலையிலேயே சஜித் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *