களமிறங்கினால் வெல்வது உறுதி! – கரு அதிரடி

“ஜனாதிபதித் தேர்தலில் என்னை வேட்பாளராக ஐக்கிய தேசிய முன்னணி களமிறக்கினால் வெற்றியடைவேன் என்பது உறுதி.”

– இவ்வாறு சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்தார்.

ஐக்கிய தேசிய முன்னணி சார்பில் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளராகக் கரு ஜயசூரியவே களமிறங்குவார் எனச் செய்திகள் வெளியாகியுள்ளன. இது தொடர்பில் அவரிடம் வினவியபோதே மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“நான் ஜனாதிபதி வேட்பாளராகக் களமிறங்கத் தயார் நிலையில் உள்ளேன். எனினும், நான் ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்குவதா? இல்லையா? என்பதை கட்சியின் உயர்பீடம்தான் தீர்மானிக்க வேண்டும். அது தொடர்பில் உத்தியோகபூர்வமான அறிவிப்பு இன்னமும் வெளியாகவில்லை.

ஜனாதிபதித் தேர்தலில் என்னை வேட்பாளராக ஐக்கிய தேசிய முன்னணி களமிறக்கினால் வெற்றியடைவேன். இது உறுதி. நான் ஒருபோதும் சூழ்ச்சிகளுக்கும் வன்முறைகளுக்கும் துணைபோகவில்லை. கடந்த வருடம் அரங்கேற்றப்பட்ட அரசியல் சதித் திட்டத்துக்கு நாடாளுமன்றத்தின் சம்பிரதாயங்களை மதித்துப் பதிலடி கொடுத்தவன் நான்.

இந்த நாட்டிலுள்ள மக்களும், சர்வதேச சமூகத்தினரும் என் மீது அதீத நம்பிக்கை வைத்துள்ளனர். அதை வீண்போகச் செய்யமாட்டேன்.

நான் ஜனாதிபதியானால் நீதியின் வழியில் நடப்பேன். அராஜகங்களுக்கு முடிவு கட்டுவேன். இந்த நாட்டில் சிங்கள, தமிழ், முஸ்லிம் என்று மூவின மக்களும் சமவுரிமையுடன் சுதந்திரமாக, ஒற்றுமையாக வாழும் நிலையை ஏற்படுத்துவேன்.

இந்த நாடு ஓர் இனத்துக்கு மட்டும் சொந்தமல்ல. மூன்று இனத்தவர்களுக்கும் சொந்தமான நாடு. எனவே, இங்கு இன வன்முறைக்கோ அல்லது மத வன்முறைக்கோ நான் ஒருபோதும் இடமளிக்கமாட்டேன்” – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *