கன்னியா பிள்ளையார் ஆலயத்தில் பௌத்த விகாரை அமைக்க இடைக்காலத் தடையுத்தரவு! – திருமலை மேல்நீதிமன்றம் அதிரடி

* பிக்குகள் அனுமதிச்சீட்டு விற்றுப் பணம் பெறவும் தடை; இந்துக்கள் சுதந்திரமாகச் சென்று சமயக் கடமைகளை நிறைவேற்ற முடியும்.
* ஆலயத்தை அதன் தர்மகர்த்தா சபையே தொடர்ந்து நிர்வகிக்க வேண்டும்.
* மாரியம்மன் ஆலயம் மற்றும் அதற்குச் சொந்தமான ஏனைய வழிபாட்டிடங்களைப் புனரமைப்புச் செய்வதை எவரும் தடுக்கக்கூடாது.

திருகோணமலை, கன்னியாவில் பிள்ளையார் ஆலயம் இருந்த இடத்தில் பௌத்த விகாரை அமைப்பதை உடனடியாக நிறுத்துமாறு திருகோணமலை மேல்நீதிமன்றம் இன்று இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பித்துள்ளது.

திருகோணமலை கன்னியா வெந்நீரூற்று, பிள்ளையார் ஆலயம் மற்றும் மாரியம்மன் ஆலயம் ஆகியவற்றின் ஆதனங்களின் தர்மகர்த்தா சபையின் நம்பிக்கைப் பொறுப்பாளர் கணேஷ் கோகிலரமணி, குறித்த பகுதிகளில் அரங்கேற்றப்படும் அடாவடிகள் குறித்து திருகோணமலை மேல்நீதிமன்றத்தில் கடந்த 19ஆம் திகதி எழுத்தாணை மனுத் தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனு திருகோணமலை மேல் நீதிமன்றத்தில் நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் தலைமையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

மனுதாரர் சார்பில் சட்டத்தரணி உதயகுமார் பிரஷாந்தினியின் அறிவுறுத்தலின்படி ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் முன்னிலையானார். அவருடன் சட்டத்தரணி கேசவன் சயந்தனும் முன்னிலையானார்.

சட்டத்தரணிகளின் சமர்ப்பணங்களைத் தொடர்ந்து, திருகோணமலை மேல்நீதிமன்றம் நான்கு இடைக்காலக் கட்டளைகளை வழங்கியுள்ளது.

இது தொடர்பில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் கருத்துத் தெரிவிக்கையில்,

“நாங்கள் கேட்டுக்கொண்ட இடைக்காலத் தடையுத்தரவு ஐந்தில் நான்கை நீதிமன்றம் வழங்கியுள்ளது. இதில் ஒரு இடைக்காலத் தடையுத்தரவு பௌத்தர்களினால் இடிக்கப்பட்ட கன்னியா பிள்ளையார் ஆலயத்தை மீளக் கட்டுவதை எவரும் தடுக்கக் கூடாது என்று கேட்டிருந்தோம். ஆனால், நீதிமன்றம் இணங்கவில்லை. அது சம்பந்தமாக தொல்பொருள் திணைக்களம் வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது. எனவே, இந்த வழக்கின் இடையில் அல்லது வழக்கின் இறுதியில் இது தொடர்பாக இரு தரப்பினரையும் விசாரித்து தீர்ப்பு வழங்குவதாக மன்று கூறியுள்ளது.

எனினும், மிக அவசரமான மற்றைய நான்கு விடயங்களுக்கும் நீதிமன்றத்தால் இடைக்காலத் தடையுத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

இவற்றில், முதலாவதாக கன்னியா பிள்ளையார் ஆலயம் இருந்த இடத்தில் பௌத்த விகாரை அமைப்பதை உடனடியாக நிறுத்துமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இரண்டாவதாக, கன்னியா வெந்நீரூற்றுக்கும் பிள்ளையார் ஆலயத்துக்கும் செல்பவர்களிடம் பௌத்த பிக்குகளினால் பற்றுச்சீட்டு அதாவது அனுமதிச்சீட்டு விற்றுப் பணம் பெறக் கூடாது எனவும், கன்னியா வெந்நீரூற்றுக்கும் பிள்ளையார் ஆலயத்துக்கும் இந்து பக்தர்கள் சுதந்திரமாகச் சென்றுவர வேண்டும் எனவும், அங்கு அவர்கள் சமய அனுட்டானங்கள் செய்வதை எவரும் தடைசெய்ய முடியாது எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

மூன்றாவதாக, திருகோணமலை கன்னியா வெந்நீரூற்று, பிள்ளையார் ஆலயம், மாரியம்மன் ஆலயம் மற்றும் அதற்குச் சொந்தமான மற்ற வழிபாட்டிடங்களின் ஆதனங்களை அதன் தர்மகர்த்தா சபையே தொடர்ந்து நிர்வகிக்க வேண்டும் எனவும், அதை எவரும் தடுக்கக்கூடாது எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

நான்காவதாக கன்னியா வெந்நீரூற்றுப் பகுதி, பிள்ளையார் ஆலயம் தவிர்ந்த மாரியம்மன் ஆலயம் மற்றும் அதற்குச் சொந்தமான ஏனைய வழிபாட்டிடங்களைப் புனரமைப்பு செய்வதை எவரும் தடுக்கக்கூடாது எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

நீதிமன்றக் கட்டளைகளையும் நீதிமன்றப் பதிவாளர் ஊடாக அனுப்புகின்ற அறிவித்தலையும் எதிர் மனுதாரர் இருவருக்கும் அனுப்பி அவர்கள் இருவரையும் எதிர்வரும் ஆகஸ்ட் 29ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறும் அழைப்பாணையும் அனுப்பப்பட்டுள்ளது.

மேலும், அவசரமாக இன்னுமொரு கோரிக்கையையும் நீதிமன்றில் முன்வைத்தோம். அதாவது இந்தக் கன்னியா வெந்நீரூற்றிலேதான் இறந்த தங்களுடைய மூதாதைகளுக்கான பிதிர்க் கடன்களை இந்து சமயத்தவர் செய்வது வழக்கம். அதிலேயும் விசேடமாக ஆடி ஆமாவாசையன்று இதனை அனைவரும் மேற்கொள்வது வழக்கம். எதிர்வரும் 31ஆம் திகதி ஆடி அமாவாசை தினம் ஆதலால் இந்துப் பக்தர்கள் அங்கு செல்வதைச் சிலர் தடுப்பார்கள். இந்தநிலையில், அப்படித் தடுக்கக் கூடாது என்ற தடையுத்தரவு தற்போது கிடைக்கப் பெற்றுள்ளது. எனவே, எந்தத் தடையும் இல்லாது இந்துக்கள் ஆடி அமாவாசை தினத்தில் தங்களது கிரியைகளை மேற்கொள்ள முடியும்” – என்றார்.

“நீண்டகாலமாக நிலவி வந்த கன்னியா வெந்நீரூற்றுப் பிரச்சினைக்குத் தீர்வு கிட்டப்பட்டுள்ளது. இந்துக்கள் தமது பூர்வீக நிலத்தை அனுபவிக்க வழி அமைக்கப்பட்டுள்ளது. திருகோணமலை கன்னியா வெந்நீரூற்று, பிள்ளையார் ஆலயம் மற்றும் மாரியம்மன் ஆலயம் ஆகியவற்றின் ஆதனங்களின் தர்மகர்த்தா சபைகளின் நம்பிக்கைப் பொறுப்பாளராக கோகிலரமணி அம்மா இருக்கின்றார். அவர்தான் இந்த வழக்கின் மனுதாரர். கன்னியா வெந்நீரூற்றுப் பகுதி மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் பல்லாயிரம் ஆண்டுகளாக இந்து மக்கள் செய்து வந்த கிரியைகளைத் தற்போது தொல்பொருள் திணைக்களம் தடுக்கின்றது என்ற முறைப்பாட்டை அவர் முன்வைத்துள்ளார். முழு இந்து மக்களுக்குமாகக் கோகிலரமணி அம்மா இந்த வழக்கைத் தாக்கல் செய்துள்ளார். அவருக்கு அனைத்து மக்கள் சார்பிலும் நன்றி சொல்ல நாம் கடமைப்பட்டுள்ளோம்” என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *