நாடாளுமன்றில் ரணில் – மஹிந்த இரகசியமாகப் பேசியது என்ன? – இருவரும் தெளிவுபடுத்த வேண்டும் என்கிறது ஜே.வி.பி.

“அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான வாக்கெடுப்புக்கு முன்னர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்சவுக்கும் இடையில் நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியின் இரண்டாம் மாடியில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இதன்போது கலந்துரையாடப்பட்ட விடயங்கள் என்ன? இரு தலைவர்களும் நாட்டுக்குத் தெளிவுபடுத்த வேண்டும்.”

– இவ்வாறு வலியுறுத்தினார் ஜே.வி.பியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அநுரகுமார திஸாநாயக்க.

ஜே.வி.பியின் தலைமையகத்தில் இன்று வெள்ளிக்கிழமை முற்பகல் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்சவும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனும் சரியான முடிவை எடுத்திருந்தால் அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை வெற்றிபெற வைத்திருக்கலாம். ஆனால், இருவரும் தவறிழைத்துவிட்டனர்.

இலஞ்ச அரசியல் ஊடாகவே நம்பிக்கையில்லாப் பிரேரணையைத் தோற்கடிப்பதற்கான ஆதரவை அரசு திரட்டியது.

அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான வாக்கெடுப்புக்கு முன்னர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்சவுக்கும் இடையில் நேற்று நண்பகல் 12. 10 முதல் 12.30 மணிவரையில் நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் இரண்டாம் மாடியில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

இதன்போது கலந்துரையாடப்பட்ட விடயங்கள் என்ன? இரு தலைவர்களும் நாட்டுக்குத் தெளிவுபடுத்த வேண்டும்.

1949இல் இருந்து இற்றைவரை அரசுகளுக்கு எதிராக 26 நம்பிக்கையில்லாப் பிரேரணைகள் கொண்டுவரப்பட்டுள்ளன. இவற்றில் ஒரு பிரேரணை மட்டுமே வெற்றிபெற்றுள்ளது. அதுவும் கடந்த ஒக்டோபர் மாதம் ஆட்சிக் கவிழ்ப்பு சூழ்ச்சியின்போது மஹிந்த அரசுக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட பிரேரணையாகும்” – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *