விடுதலைப்புலிகளின் மேன்மையை கொச்சைப்படுத்துகின்ற நரித்தனம்! – மைத்திரியின் கருத்துக்கு சரவணபவன் கடும் கண்டனம்

“போதைப்பொருள் வர்த்தகம் மேற்கொண்டு அந்தப் பணத்திலேயே தமிழீழ விடுதலைப்புலிகள் போராட்டம் நடத்தினர் என்ற அபாண்டமான பொய் ஒன்றை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார். மனநிலை தடுமாறும் ஒருவரின் உளறல் என மேலோட்டமாகத் தென்பட்டாலும், ஒரு புனிதமான போராட்டத்தையும், ஒப்பற்ற தியாகங்களைத் செய்து உரிமைக்காகத் தம்மை அர்ப்பணித்த போராளிகளின் மேன்மையையும் கொச்சைப்படுத்தும் நரித்தனம் அதற்குள் புதைந்துள்ளதை அவதானிக்க முடியும்.”

– இவ்வாறு தெரிவித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன்.

தமிழீழ விடுதலைப்புலிகள் போதைப்பொருள் வர்த்தகம் மேற்கொண்டு அதன்மூலமான வருமானத்தைக் கொண்டே போராட்டத்தை நடத்தினார்கள் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்றுமுன்தினம் தெரிவித்திருந்தார். அது தொடர்பாகக் கருத்துத் தெரிவித்தபோதே நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவன் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“தமிழீழ விடுதலைப் போராட்டம் ஆகாயத்தில் இருந்து கீழிறங்கிய தேவதூதர்களால் நடத்தப்பட்டதல்ல. கொலை, கொள்ளை, கப்பம் என சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடும் பாதாள உலகக்குழுவால் மேற்கொள்ளபட்டதல்ல. எமது நியாயபூர்வமான உரிமைகள் பறிக்கப்பட்டபோது எம்மீது ஒடுக்குமுறைகளும் வன்முறைகளும் இனவழிப்பும் தொடரப்பட்டபோது எமது இளைஞர்கள் போராட நிர்ப்பந்திக்கப்பட்டனர். ஆயுத ஒடுக்குமுறைகளுக்கு முகம்கொடுத்து ஆயுதம் ஏந்த வேண்டிய நிலை எழுந்தது.

ஆரம்பகாலத்தில் போராளிகள் ஆயுதங்களைப் பணம் கொடுத்து வாங்கவில்லை. உயிரை விலையாய் கொடுத்தே ஆயுதங்களைப் பெற்றுக் கொண்டனர். படையினர் மேல் தாக்குதல்களை மேற்கொண்டும், கெரில்லா நடவடிக்கைகளின் மூலமும் ஆயுதங்களைத் தேடினர்.

இதை ஜனாதிபதியால் மறுக்க முடியுமா? போராட்டம் வலுப்பெற்றபோது மேலும் அதிக ஆயுதங்கள் தேவைப்பட்டன. எமது தாய்மாரும், சகோதரிகளும் காதுத் தோட்டிலிருந்து கழுத்துத் தாலி வரை கழற்றிக் கொடுத்தனர். பொதுமக்கள் காலம் காலமாகத் தேடிய சொத்துக்கள் ஆயுதமாக மாறி எமது விடுதலைப் போராட்டத்தை வலுப்படுத்தின. ஆயுதங்களின் தேவை அதிகரித்தபோது எமது புலம்பெயர் தமிழர்கள் இரவு – பகல் பாராது உழைத்தனர். தமது உதிரத்தை உழைப்பாய் மாற்றி விடுதலைப்புலிகளுக்கு ஆயுதங்கள் வாங்கப் பணம் வழங்கினர்.

இது அரசுக்கு நிகராக விடுதலைப்புலிகள் ஆயுத பலம் கொண்டு விடுதலைப் போராட்டத்தை முன்னெடுக்க எமது மக்களும் போராளிகளும் உழைப்பையும் உதிரத்தையும் கொடுத்த வரலாறு – இது உலகம் அறிந்த வரலாறு. அதை மறுத்து போதைப்பொருள்களுக்கும் விடுதலைப்புலிகளுக்கும் முடிச்சுப் போடுகின்றார் மைத்திரி.

ஒருபுறம் திரிபீடக்தை உலக மரபுரிமைச் சொத்தாக மாற்ற வேண்டும் எனக் கூறிக் கொண்டு மறுபுறம் கல்லால் எறிந்து சாவுத் தண்டனை வழங்க வேண்டும் எனக் கொக்கரிக்கும் மகாநாயக்கர்களின் ஆலோசனையைக் கேட்டு நடக்க வேண்டும் எனக் கோரும் வேடதாரியல்ல பிரபாகரன். கொலை, களவு, பாலியல் வல்லுறவு என்பன இல்லாத ஒரு சமூகத்தைக் கட்டமைத்து நடத்திக் காட்டியவர்.

ஜனாதிபதி வெளியிட்டுள்ள இப்படியான ஒரு கூற்றுமூலம் தமிழ் மக்கள் மீதான குரோத எண்ணங்களைக் கொண்டிருக்கின்றார் என்பதை எம்மால் உணர முடிகின்றது. ஆனால், தேசிய அளவிலும் சர்வதேச அளவிலும் தன்னை ஒரு கீழ்த்தரமான வசைபாடியாக ஜனாதிபதி வெளிக்காட்டியுள்ளார் என்பதே உண்மையாகும்” – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *