குருணாகல் வைத்தியருக்கு எதிராக 51 முறைப்பாடுகள்! – அவரின் கருத்தடை வேலைகள் 99 வீதம் உறுதி என்கிறார் ரத்தன தேரர்

குருணாகல் வைத்தியசாலையில் சிசேரியன் சத்திர சிகிச்சை என்ற போர்வையில் சிங்களப் பெண்களுக்குக் கருத்தடை சத்திர சிகிச்சை செய்தார் எனக் குற்றம் சாட்டப்பட்டுள்ள மகப்பேற்று வைத்தியர் சேகு சியாப்டீன் மொஹமட் ஷாபிக்கு எதிராக இதுவரை 51 பெண்கள் முறைப்பாடு செய்துள்ளனர்.

இவை குருணாகல் வைத்தியசாலையில் செய்யப்பட்ட முறைப்பாடுகள். அதேபோல் மேலும் ஒரு முறைப்பாடு தம்புள்ளை வைத்தியசாலையில் பெண் ஒருவரால் செய்யப்பட்டுள்ளது.

இந்த முறைப்பாடுகள் குறித்து விசாரணை செய்ய சுகாதார அமைச்சு குழுவொன்றை நியமித்துள்ளது.

விசாரணை முடிவடையும் வரை எதையும் கூறிவிட முடியாது என சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன இன்று கூறியுள்ளார்.

அதேவேளை, இன்று (27) குருணாகல் வைத்தியசாலைக்குச் சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்தன தேரர்,

“வைத்தியர் ஷாபி செய்த சட்டவிரோத வேலைகள் 99 வீதம் உறுதியாகிவிட்டன. இந்த விடயத்தில் யாராவது அழுத்தங்களை வழங்கக் கூடாது.

குறித்த வைத்தியர், அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் நெருங்கிய சகா. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ரிஷாத் பதியுதீனின் கட்சியின் (அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்) மூலம் ஐக்கிய தேசிய முன்னணியில் குருணாகல் மாவட்ட வேட்பாளராகப் போட்டியிட்டார். அதேசமயம் தேசிய தௌஹீத் ஜமா அத் அமைப்புடன் தொடர்பு வைத்திருந்தார்.

சஹ்ரானின் வெடிகுண்டைவிட பயங்கரமானது வைத்தியர் ஷாபியின் விவகாரம். அவருக்குக் எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இதனைத் திட்டமிட்ட இனச் சுத்திகரிப்பாகவே நாம் பார்க்கின்றோம்” – என்று தெரிவித்தார்.

இதேவேளை, முறைப்பாடுகளை முன்வைத்த பெண்கள் அனைவரும் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளனர் என்று குருணாகல் வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *