அவசரகாலச் சட்டம் மிகவிரைவில் நீக்கம்! – சுற்றுலாப் பயணிகள் மீதான தடையை உடன் தளர்த்துங்கள் என தூதுவர்களிடம் மைத்திரி வலியுறுத்து

இலங்கையில் அமைதியை நிலைநாட்ட அமுலாக்கப்பட்டுள்ள அவசரகாலச் சட்டம் விரைவில் நீக்கப்படும் என உறுதியளித்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் மீது அந்தந்த நாடுகளினால் விதிக்கப்பட்டுள்ள தடைகளை விரைவில் நீக்குமாறும் வலியுறுத்தியுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் வெளிநாட்டுத் தூதுவர்களுக்கும் இடையிலான சந்திப்பு இன்று (27) முற்பகல் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெற்றது. இதன்போதே மேற்படி விடயங்களை அவர் எடுத்துரைத்தார்.

அமெரிக்கா, பிரிட்டன், கனடா, ஜப்பான், ஜேர்மன், ஆஸ்திரேலியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத் தூதுவர்கள் இந்தச் சந்திப்பில் கலந்துகொண்டனர்.

பயங்கரவாதச் சவாலுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட வெற்றிகரமான நடவடிக்கைகள் குறித்து இதன்போது தூதுவர்களுக்கு விளக்கமளித்த ஜனாதிபதி, தற்போது நாட்டின் பாதுகாப்பு நிலைமைகள் நூற்றுக்கு தொண்ணூற்றொன்பது சதவீதம் இயல்புநிலைக்கு திரும்பியிருக்கின்றது எனவும் உறுதியளித்தார்.

பாதுகாப்புத் துறையினரும் புலனாய்வுத் துறையினரும் மேற்கொண்ட வெற்றிகரமான நடவடிக்கைகளே இதற்குக் காரணமாகும் எனச் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, நாட்டின் பாதுகாப்புத் துறையினருக்கு வெளிநாட்டு புலனாய்வுத் துறையினரிடமிருந்து கிடைக்கப்பெற்ற உதவிகளையும் பாராட்டினார்.

தேசிய பாதுகாப்பு நிகழ்ச்சித் திட்டங்களில் இந்த அனைத்து நாடுகளும் வழங்கிய ஒத்துழைப்பையும் பொருளாதார அபிவிருத்திக்கான உதவியையும் தொடர்ந்தும் எதிர்பார்ப்பதாகக் கூறிய ஜனாதிபதி, உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் சுற்றுலாப் பயணிகளின் மீது விதிக்கப்பட்டுள்ள தடைகளை விரைவில் நீக்குவதற்கு உதவுமாறும் தூதுவர்களிடம் கேட்டுக்கொண்டார்.

நாட்டின் தற்போதைய பாதுகாப்பு நிலைமை குறித்து விளக்கமளித்தமைக்காக இதன்போது ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்த வெளிநாட்டுத் தூதுவர்கள், இலங்கைக்கு வருகை தருவதற்கு தமது நாடுகளின் சுற்றுலாப் பயணிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை விரைவில் நீக்குவதற்குத் தேவையான தலையீட்டைச் செய்வதாகவும் உறுதியளித்தனர்.

இதேநேரம் அவசரகாலச் சட்டம் மேலும் ஒரு மாதத்துக்கு நீடிக்கப்பட்டிருப்பது குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டதுடன், பாதுகாப்புத் துறையின் வெற்றிகரமான நடவடிக்கைகளைத் தொடர்ந்தும் முன்னெடுப்பதற்கு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள போதிலும் மீண்டும் அவசரகால சட்டத்தை நீடிக்கும் தேவை ஏற்படாது எனத் தான் நம்புவதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி, சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளமை குறித்தும், வெடிபொருட்கள், ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டிருக்கின்றமை தொடர்பிலும் விளக்கினார்.

மேலும் இத்தகைய கொடூரத் தாக்குதல்கள் மீண்டும் இடம்பெறாதிருப்பதை உறுதிசெய்வதற்குப் பாதுகாப்புத் துறையில் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன எனவும், புதிய சட்டங்கள் வகுக்கப்படுவதுடன், நிறுவனக் கட்டமைப்பொன்றை ஸ்தாபிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

ஜனாதிபதியின் செயலாளர் உதய ஆர்.செனெவிரத்ன, வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ரவிநாத் ஆரியசிங்க, ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் எசல வீரகோன் உள்ளிட்ட அதிகாரிகளும் இந்தச் சந்திப்பில் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *