பெற்ற தாயாரால் உயிருடன் புதைக்கப்பட்ட குழந்தையைக் காப்பாற்றிய ‘பிங் பாங்’ நாய்!

தாய்லாந்து நாட்டில் சொந்தத் தாயால் உயிருடன் மண்ணில் புதைக்கப்பட்ட பச்சிளம் குழந்தையை நாய் ஒன்று காப்பாற்றியுள்ளது.

தாய்லாந்தின் பேன் நாங் காம் என்ற கிராமத்தில் பிங் பாங் என்ற அந்த நாய் சமீபத்தில், குரைத்துக்கொண்டே மண்ணைத் தோண்டியுள்ளது.

அதைக் கவனித்த அந்த நாயின் உரிமையாளர், குழந்தையின் கால் ஒன்று மண்ணில் தெரிவதைப் பார்த்துள்ளார்.

அவர் உஷார்ப்படுத்தியதன் பேரில் உள்ளூர்வாசிகள் அந்தக் குழந்தையை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர். அங்கு குழந்தையை சுத்தம் செய்த மருத்துவர்கள் குழந்தை நலமாக இருப்பதாகத் தெரிவித்தனர்.

கார் ஒன்று மோதியதற்குப் பிறகு பிங் பாங்கின் கால்களில் ஒன்றைப் பயன்படுத்த முடியாமல் போனதாக அதன் எஜமானர் உசா நிசாய்கா கூறுகிறார்.

‘‘பிங் பாங் மிகவும் விசுவாசமாகவும், சொல்வதைக் கேட்டும் நடந்துகொள்ளும். நான் எனது கால்நடைகளை மேய்க்கச் செல்லும்போது பிங் பாங் எனக்கு உதவி செய்யும். கிராமத்தினர் அனைவரும் பிங் பாங்கை நேசிக்கின்றனர். அது அற்புதமான நாய்’’ என்று அவர் பெருமிதத்தோடு சொல்கிறார்.

பரிதாபத்துக்கு உரிய குழந்தையை மண்ணில் புதைக்க முயன்றவர் ஒரு 15 வயதுப் பெண். அவர் தான் குழந்தை பெற்றதை வெளியே தெரியாமல் மறைக்கவே இவ்வாறு செய்துள்ளார்.

அப்பெண் மீது, பச்சிளம் குழந்தையைக் கைவிடுதல், கொலை செய்ய முயற்சித்தல் ஆகிய குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

அவர் தற்போது அவரது பெற்றோரின் கவனிப்பில், மனநல ஆலோசனை பெற்று வருகின்றார் எனப் பொலிஸார் தெரிவித்தனர். தனது செயலுக்காக அந்த இளம் தாய் வருந்துவதாகவும் அவர்கள் கூறினர்.

இந்நிலையில், குழந்தையை வளர்க்க அப்பெண்ணின் பெற்றோர் முடிவு செய்துள்ளனர்.

மனிதர்களிடம் மனிதநேயம் மறைந்துவரும் இன்றைய நிலையில், விலங்குகளிடம்தான் அதைக் காண முடிகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *