உலகக் கிண்ணப் போட்டிக்குப் பிறகு ஓய்வை அறிவிக்கவுள்ள 5 சிங்கங்கள்!

கிரிக்கெட் உலகின் திருவிழா என்றால் அது உலகக் கிண்ணத் தொடராகத்தான் இருக்க முடியும். 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஐ.சி.சியால் நடத்தப்படும் இந்தத் தொடர், எதிர்வரும் 30 ஆம் திகதி ஆரம்பமாகின்றது.

12ஆவது உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரான இதில், 10 முன்னணி கிரிக்கெட் அணிகள் பங்கேற்கின்றன. கிரிக்கெட் இரசிகர்களுக்கு ஏறத்தாழ 2 மாதங்கள் தீனி போடும் தொடராக இந்தத் தொடர் இருக்கும் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை. அதேபோல், பல்வேறு அணிகளைச் சேர்ந்த நட்சத்திர வீரர்கள் பலர் இந்த உலகக் கிண்ணத் தொடரோடு, சர்வதேச கிரிக்கெட்டுக்கு, முழுக்குப் போடலாம் எனத் தெரிகின்றது.

விளையாட்டைப் பொறுத்தவரை ஒய்வு என்பது தவிர்க்க முடியாதது. நமக்குப் பிடித்த கிரிக்கெட் வீரர்களில் பெரும்பாலோர் தங்கள் ஓய்வை அறிவிக்கக் காத்துக்கொண்டு இருக்கின்றனர். கனத்த இதயத்துடன் அவர்களுக்கு விடைகொடுக்க இரசிகர்களும் தயாராகிவிட்டனர். ஓய்வை அறிக்க இருக்கும் 5 நட்சத்திர வீரர்களைக் கீழ் காணலாம்.

டோனி

37 வயதான இவர் பல ஆண்டுகளாக இந்திய அணியின் நட்சத்திர வீரராகத் திகழ்கின்றார். இந்தியாவின் வெற்றிகரமான கப்டன்களில் ஒருவராக வலம் வந்த டோனிக்கு இந்தியா மட்டும் அல்லாது உலகம் முழுவதும் இரசிகர்கள் உள்ளனர். சமீப காலங்களில் இவர் நல்ல பார்மில் உள்ளார்.

இதற்கு அண்மையில், ஐ.பி.எல். தொடரில், டோனி எதிரணியை கலங்கடித்ததே சான்று. மிகச்சிறந்த பினிஷர்களில் ஒருவர் என்று புகழப்படும் டோனி வயது மூப்பு மற்றும் ரிஷ்ப் பண்ட் போன்ற இளம் வீரர்களின் சிறப்பான செயற்பாடுகள் ஆகியவையால் டோனி தனது ஓய்வை அறிவிப்பார் எனப் பரவலாக கிரிக்கெட் வட்டாரத்தில் பேசும் செய்தியாக இருக்கிறது. எனினும், டோனி தொடர்ந்து விளையாடுவார் என்று அவரது இரசிகர்கள் நம்பிக்கையோடு கூறுகின்றனர்.

கிரிஸ் கெயில்

39 வயதான இவர், தனது அதிரடி ஆட்டதின் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர், இதுவரை இவர் மேற்கிந்திய தீவுகளுக்காக நான்கு உலகக் கிண்ணத் தொடர்களில் பங்கேற்றுள்ளார். 2018ஆம் ஆண்டு இவரது கிரிக்கெட்டுக்கான மிக மோசமான ஆண்டுகளில் இதுவும் ஒன்று.

இருப்பினும் நடைபெறவுள்ள உலகக் கிண்ணப் போட்டியில் அதிரடி ஆட்டத்தை வெளிபடுத்துவார் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த உலகக் கிண்ணப் போட்டியில் கடைசி ‘கெய்ல் புயல்’ ஒன்றை இரசிகர்களுக்கு பரிசாக வழங்குவதற்கான சரியான வாய்ப்பாக இருக்கும்.

ராஸ் டெய்லர்

35 வயதான இவர், 2006 ஆம் ஆண்டில் தனது முதல் ஒரு நாள் போட்டியை ஆடினார், நியூசிலாந்து அணிக்காக பல போட்டிகளில் நல்ல வீரராகவும் கப்டனாகவும் செயற்பட்டுள்ளார். நியூசிலாந்தின் முன்னாள் கப்டன் டெய்லர் 2018ஆம் ஆண்டில் 11 ஒருநாள் போட்டிகளில் 639 ஓட்டங்களை எடுத்து நல்ல பார்மில் உள்ளார். இருப்பினும், வயது மூப்பு மற்றும் நிலையற்ற ஆட்டம் ஆகியவையால் இவர் தனது ஓய்வை அறிவிப்பார் என எதிர்பார்க்கலாம்

டேல் ஸ்டெயின்

35 வயதான தென்னாபிரிக்கா அணியின் வேகப்பந்து வீச்சாளரான இவர், ஏறத்தாழ 800 இற்கும் மேற்பட்ட விக்கெட்களை கைப்பற்றியுள்ளார். 2016ஆம் ஆண்டுக்குப் பிறகு தென்னாபிரிக்க அணியில் பெரிய அளவில் இடம்பெறவில்லை. எனினும், ஹாப்கிஸ் கவுண்டி கிரிக்கெட் கிளப் இங்கிலாந்து மற்றும் வேல்ஸின் உள்நாட்டு முதல் வகுப்பு கிரிக்கெட் சர்க்யூட் ஆகியவற்றில் சிறப்பாக செயற்பட்டதால் உலகக் கிண்ணப் போட்டி அணியில் இடம்பெற்றுள்ளார். இவரும் தனது ஓய்வை அறிவிப்பார் எனக் கூறப்படுகின்றது.

ஹசிம் அம்லா

36 வயதான ஹசிம் அம்லா, தென்னாபிரிக்க அணியின் ரன் மெஷின் என்று சொன்னால் அது மிகையாது. 174 போட்டிகள் விளையாடியுள்ள அம்லா, பல்வேறு சாதனைகளைப் படைத்துள்ளார். அதிவேகமாக 2 ஆயிரம், 3 ஆயிரம், 4 ஆயிரம், 5 ஆயிரம், 6 ஆயிரம், 7 ஆயிரம் ஓட்டங்கள் அடித்த வீரர்கள் சாதனையை அம்லா தன்னகத்தே வைத்துள்ளார்.

27 சதங்கள் அடித்துள்ள அம்லாவுக்கு இதுதான் கடைசி உலகக் கிண்ணத் தொடராக இருக்கும். ஒருமுறை கூட உலகக் கிண்ணத்தைக் கைப்பற்றாத தென்னாபிரிக்கா, இம்முறை வெற்றி பெறுவோம் எனத் தீர்க்கமாக நம்புகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *