இறந்த தாயிடம் பால் குடித்த 8 மாதக் குழந்தை: முதலாவதாக இன்று சுடர் ஏற்றிய முள்ளிவாய்க்கால் துயரின் சாட்சி

தமிழின அழிப்பின் – முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் பத்தாவது ஆண்டு நினைவேந்தலை நாம் இன்று கண்ணீருடன் அனுஷ்டித்துக் கொண்டிருக்கின்றபோதும் போர் நம் இதயங்களில் தந்து சென்ற வடு எத்தனை வருடங்கள் கடந்தாலும் மாறாதது.

நூற்றுக்கணக்கான பொலிஸார் பலத்த பாதுகாப்பை வழங்க இன்றைய தினம் முள்ளிவாய்க்கால் மண் எமது உறவுகளின் கண்ணீரில் நனைந்துள்ளது.

இவ்வாறான சந்தர்ப்பத்தில் துயர் சுமந்து நிற்கும் எம் உறவுகளுக்கு மத்தியில் முள்ளிவாய்க்கால் துயரின் சாட்சியாக வாழ்ந்து கொண்டிருக்கும் சிறுமி ராகினி இன்று பொது ஈகைச்சுடரை முதன்முதலாக ஏற்றிவைத்திருந்தார்.

இறுதிப் போர் நடந்தபோது இலங்கை அரச படைகள் நடத்திய கோரத் தாக்குதலில் சிறுமி ராகினி தனது கையொன்றைப் பறிகொடுத்திருந்தார்.

அதைவிடப் பேரவலம் என்னவெனில் இறந்த தனது தாயிடம், அப்போது பிறந்து எட்டு மாதங்களே ஆகியிருந்த ராகினி பால் குடித்த காட்சிதான்.

தாயின் உயிர் பிரிந்தது அறியாமல், தந்தை படுகாயங்களுக்கு இலக்காகி உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தது தெரியாமல் அந்த எட்டு மாத பச்சிளம் குழந்தை தாயிடம் பால் குடித்த காட்சி அனைவரினதும் நெஞ்சையும் கனக்கச் செய்து விட்டது.

தனது கை ஒன்றை இழந்த நிலையிலும் கடந்த வருடம் நடைபெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த ராகினியே இன்று பொது ஈகைச்சுடரை ஏற்றி நினைவேந்தலை ஆரம்பித்து வைத்துள்ளமையானது முள்ளிவாய்க்கால் பேரவலத்தை கண்முன்னே கொண்டு வந்துள்ளது.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *