வடமேல் மாகாணத்தில் தொடர்ந்து ‘ஊரடங்கு!’

வடமேல் மாகாணத்தில் நேற்று மாலை பிறப்பிக்கப்பட்ட பொலிஸ் ஊரடங்குச் சட்டம், தொடர்ந்தும் நடைமுறையில் இருக்கின்றது எனப் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர அறிவித்துள்ளார்.

முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டதை அடுத்து வடமேல் மாகாணத்தில் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது.

மறு அறிவித்தல் வரை இந்த ஊரடங்குச் சட்டம் நடைமுறையில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

பின்னர் கம்பஹா மாவட்டத்திலும், ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டது.

அதையடுத்து, நாடு முழுவதிலும் நேற்றிரவு 9 மணி தொடக்கம் இன்று அதிகாலை 4 மணி வரை ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது.

இந்த ஊரடங்குச் சட்டம் கம்பஹா மாவட்டத்தில் காலை 6 மணியுடனும், நாட்டின் ஏனைய பகுதிகளில் இன்று அதிகாலை 4 மணியுடனும் நீக்கப்பட்டது.

எனினும், குருணாகல், புத்தளம் மாவட்டங்களை உள்ளடக்கிய வடமேல் மாகாணத்தில் தொடர்ந்தும் ஊரடங்குச் சட்டம் நடைமுறையில் இருக்கின்றது எனப் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

பாடசாலைகளுக்கு விடுமுறை

இதேவேளை, வடமேல் மாகாணத்திலுள்ள அனைத்துப் பாடசாலைகளும் இன்று (14ஆம் திகதி) மூடப்பட்டுள்ளன என்று கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

வடமேல் மாகாணத்தில் மறு அறிவித்தல் வரை பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.

அதேநேரம், நாட்டின் ஏனைய பாடசாலைகள் வழமை போன்று இயங்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரச நிறுவனங்களுக்கும் விடுமுறை

வடமேல் மாகாணத்திலுள்ள அனைத்து அரச நிறுவனங்களுக்கும் இன்று (14ஆம் திகதி) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

பொலிஸ் ஊரடங்கு சட்டம் தொடர்ந்து அமுல்படுத்தப்பட்டுள்ளமையால் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது என வடமேல் மாகாண ஆளுநர் பேஷல ஜயரத்ன தெரிவித்துள்ளார்.

தொழிலுக்குச் செல்வதற்கு அரச அதிகாரிகள் எதிர்நோக்கியுள்ள சிக்கல் மற்றும் சேவைகளைப் பெற்றுக்கொள்வதற்கு மக்கள் வருகை தராமை ஆகியவற்றைக் கருத்தில்கொண்டு அரச அதிகாரிகளுக்கு விடுமுறை வழங்குவதற்குத் தீர்மானித்ததாகவும் வடமேல் மாகாண ஆளுநர் கூறியுள்ளார்.

வடமேல் மாகாணத்தில் நிலவும் பாதுகாப்பு நிலைமை தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, வடமேல் மாகாணத்தில் நடாத்துவதற்குத் திட்டமிடப்பட்டிருந்த அனைத்து அரச நிகழ்வுகளும் தற்காலிகமாக இரத்துச் செய்யப்பட்டுள்ளன எனவும் ஆளுநர் பேஷல ஜயரத்ன சுட்டிக்காட்டியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *