உயிரைப் பணயம் வைத்தேனும் இலங்கையைக் காப்பாற்றுவேன்! – மைத்திரி தெரிவிப்பு

உயிரைப் பணயம் வைத்தேனும் தாய்நாட்டை தீவிரவாதத்திலிருந்து விடுவிப்பேன் என்று மே தின நிகழ்வில் தெரிவித்தார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன.

இலங்கை மன்றத்தில் நேற்று நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மே தின நிகழ்வில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற தாக்குதல்களால் இலங்கை வாழ் மக்களின் மனங்களில் ஏற்பட்ட வேதனையை தீவிரவாதத்தை ஒழிக்கும் சக்தியாக பயன்படுத்த வேண்டும். எந்தவித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுவதாக தெரியவில்லை என்று ஒருவருகொருவர் குறைகூறிக் கொள்வதனை விடுத்து நாடு என்ற வகையில் ஓர் இனமாக ஒன்று திரண்டு அன்று இடம்பெற்ற துன்பியல் சம்பவத்தின் வடுக்களை நினைவில்கொண்டு தீவிரவாதத்தை இல்லாதொழித்து நாட்டின் சமாதானத்தை நிலைநாட்டுவதற்கு உறுதியுடனும் தன்னம்பிக்கையுடனும் அனைவரும் ஒரே கொடியின் கீழ் ஒன்று திரள வேண்டும்.

இந்தத் துன்பியல் சம்பவத்தை தடுப்பதற்கான பொறுப்பை தவறவிட்டவர்களுக்கு எதிராக எதிர்காலத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

இந்தச் சம்பவம் தொடர்பில் இரண்டு வாரங்களுக்குள் அறிக்கை சமர்ப்பிப்பதற்கு நியமிக்கப்பட்ட விசேட விசாரணை குழுவின் இடைக்கால அறிக்கை எனக்குக் கிடைத்தது. அதில் குறிப்பிடப்பட்ட விடயங்கள் தொடர்பில் சட்டமா அதிபருடன் கலந்துரையாடியதன் பின்னர் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளேன்.

நாட்டில் உழைக்கும் மக்கள், தொழிற்சங்க உறுப்பினர்கள் உள்ளிட்ட அனைவரும் தேசிய பாதுகாப்பை உறுதி செய்து, அமைதியான நாட்டை கட்டியெழுப்பும் செயற்பாடுகளில் பிரிவினையின்றி ஒன்று திரள்வார்கள் என்று நம்புகின்றேன்” – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *