தமிழரசுக் கட்சியின் இளைஞர் அணித் தலைவராக சேயோனும், பொதுச்செயலாளராக சுரேனும் தெரிவு!

இலங்கைத் தமிழரசுக் கட்சி இளைஞர் அணியின் புதிய நிர்வாகத் தெரிவு வவுனியா நகர சபை மண்டபத்தில் இன்று சனிக்கிழமை நடைபெற்றது.

தமிழரசுக் கட்சியின் வவுனியா மாவட்டத் தலைவர் வைத்திய கலாநிதி ப.சத்தியலிங்கம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, பொதுச்செயலாளர் கி.துரைராஜசிங்கம், ஊடகப் பேச்சாளர் எம்.ஏ சுமந்திரன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஈ.சரவணபவன், சார்ள்ஸ் நிர்மலநாதன், எஸ்.சிவமோகன், சாந்தி சிறிஸ்கந்தராஜா, க.துரைரெட்ணசிங்கம் ஆகியோரும், தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களும், நூற்றுக்கணக்கான இளைஞர், யுவதிகளும் கலந்துகொண்டனர்.

நிகழ்வில் இலங்கைத் தமிழரசுக் கட்சி இளைஞர் அணியின் புதிய தலைவராக மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த கிருஷ்ணபிள்ளை சேயோன் தெரிவுசெய்யப்பட்டார்.

பொதுச்செயலாளராக பச்சிலைப் பள்ளி பிரதேச சபையின் தவிசாளர் சுப்பிரமணியம் சுரேன் (கிளிநொச்சி மாவட்டம்) தெரிவுசெய்யப்பட்டார்.

பொருளாளர்களாக பி.பாலச்சந்திரன் (வவுனியா மாவட்டம்), சிவநாதன் சிவதர்ஷன் (முல்லைத்தீவு மாவட்டம்) ஆகியோர் தெரிவுசெய்யப்பட்டனர்.

துணைத் தலைவர்களாக பாலச்சந்திரன் சிந்துஷன் (வவுனியா மாவட்டம்), தர்மலிங்கம் நவநீதன்(முல்லைத்தீவு மாவட்டம்), செல்வராசா டினேஷ் (மன்னார் மாவட்டம்) ஆகியோர் தெரிவுசெய்யப்பட்டனர்.

துணைச் செயலாளர்களாக அருளானந்தமூர்த்தி நிஷாந்தன் (அம்பாறை மாவட்டம்), அனோட் பிரியந்தன் (கொழும்பு மாவட்டம்), ஶ்ரீ தர்சன் (திருகோணமலை மாவட்டம்), எம்.மயூரன் (முல்லைத்தீவு மாவட்டம்), கந்தசாமி பிருந்தன் (யாழ்ப்பாணம் மாவட்டம்) ஆகியோர் தெரிவுசெய்யப்பட்டனர்.

அத்துடன் நிர்வாக சபை உறுப்பினர்களாக 18 பேர் தெரிவுசெய்யப்பட்டனர்.

இலங்கைத் தமிழரசுக் கட்சி மாதர் அணித் தெரிவும் இன்று நடைபெற்றது. தலைவராக யாழ்ப்பாணம் மாவட்டத்தைச் சேர்ந்த மதினி நெல்சன் தெரிவுசெய்யப்பட்டார்.

பொதுச்செயலாளராக முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த சுதாகர் மலர்விழி தெரிவுசெய்யப்பட்டார்.

பொருளாளராக அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த சின்னையா தர்ஷினி தெரிவுசெய்யப்பட்டார்.

அத்துடன் துணைத் தலைவர், துணைச் செயலாளர்களுடன் நிர்வாக சபை உறுப்பினர்களாக 9 பேர் தெரிவுசெய்யப்பட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *