மதுஷ் உள்ளிட்ட பல குழுக்களின் போதைப்பொருள் ‘நெட்வேர்க்’கை அம்பலப்படுத்தினார் ‘கஞ்சிப்பான’

டுபாயில் பிரபல போதைப்பொருள் வர்த்தகர் – பிரபல பாதாள உலகக் குழுத் தலைவர் மாக்கந்துர மதுஷுடன் கைதுசெய்யப்பட்டு அந்நாட்டு அரசால் அண்மையில் நாடு கடத்தப்பட்டு – பொலிஸாரின் தடுப்புக்காவலில் விசாரிக்கப்பட்டு வரும் கஞ்சிப்பான இம்ரான், விசாரணைகளில் நாளுக்கு நாள் பல முக்கிய தகவல்களை வெளியிட்டு வருகின்றார் என்று பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மதுஷுக்கு இலங்கையில் உள்ள சொத்துக்கள், அவருக்கு இருந்த அரசியல் தொடர்புகள் உட்பட்ட பல விடயங்களை இம்ரான் கூறியுள்ளார் எனத் தகவல்.

விசேடமாக இலங்கையின் போதைப்பொருள் வலையமைப்பு குறித்த பல முக்கிய தகவல்கள் இம்ரானிடம் இருந்து வெளிவந்துள்ளன எனச் சொல்லப்படுகின்றது .

இதன்படி, மாக்கந்துர மதுஷ் ரீம், வெலேசுதா ரீம், மொஹம்மட் சித்தீக் ரீம், ரத்கம விதுர ரீம், கொஸ்கொட சுஜி ரீம், தெவுந்தர தமில் ரீம், மட்டக்களப்பு ஹெரோயின் ரீம், மலேஷிய ஹெரோயின் ரீம், பாகிஸ்தான் ஹெரோயின் ரீம், இந்தியன் ஹெரோயின் ரீம், அன்னாசி மொரில் ரீம் ஆகிய குழுக்களின் மேலதிக விபரங்கள் பொலிஸாருக்குக் கிடைத்துள்ளன.

மலேஷிய மற்றும் இந்திய ரீம்களுக்கு அப்பால் இதர அனைத்தும் பாகிஸ்தானில் இருந்தே இயக்கப்படுகின்றன எனவும், வெலேசுதா மற்றும் சித்தீக் ஆகியோர் நேரடியாகவே பாகிஸ்தானில் இருந்து பொருளைக் கொண்டுவருவதால் அவர்களுக்கு பாகிஸ்தானில் செல்வாக்கு அதிகம் எனவும், ஹெரோயின் வியாபாரத்துக்கு யாராவது புதிதாக வந்தால் வெலேசுதா மற்றும் சித்தீக்குக்கு பாகிஸ்தானில் இருந்து தகவல் முதலில் சென்று விடும் எனவும் இம்ரான் விபரமாகத் தெரிவித்துள்ளார் எனச் சொல்லப்படுகின்றது.

அஜித் எரங்க வர்ணகுலசூரிய என்ற பெயரில் மதுஷுக்கு பாஸ்போர்ட் செய்து கொடுத்து சுற்றுலாப் பயணியாக 2015ஆம் ஆண்டு அவரை டுபாய்க்கு வரவழைத்ததாகக் கூறியுள்ள இம்ரான், 2016 முதல் அவருக்கு வதிவிட விசாவை ஒழுங்கு செய்து கொடுத்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அதேசமயம் இலங்கையில் மதுஷ் மற்றும் தனக்கு இருக்கும் சொத்துக்களின் விபரம் – மதுஷ் நடத்திய காணி வியாபாரம் – இலங்கையில் அரசியல்வாதிகள் மற்றும் அரச அதிகாரிகளுடன் இருந்த தொடர்புகளை இம்ரான் விபரித்துள்ளார் எனவும் பொலிஸ் வட்டாரங்கள் சொல்கின்றன.

“மதுஷ் தலையால் வேலை செய்பவர். அவர் ஒன்றை செய்து முடிக்கும் வரை எதுவும் சொல்லமாட்டார். இரத்தினக்கல் கொள்ளையைச் செய்து முடிக்கும் வரை எங்கள் யாரிடமும் அவர் எதனையும் சொல்லவில்லை. செய்திகள் வெளியான பின்னரே இதனை எங்களிடம் கூறினார். வெள்ளைக்காரர் ஒருவரைப் போட்டு இதற்குக் கேமைக் கொடுத்தேன் என்று மதுஷ் என்னிடம் கூறியபோது எனக்கே புதுமையாக இருந்தது” என்று இம்ரான் ஒரு கட்டத்தில் விசாரணை அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார்.

மதுஷ் இலங்கையில் காணி விற்பனை வர்த்தகம் ஒன்றில் முதலிட்டுள்ளார் என்று குறிப்பிட்ட கஞ்சிப்பான இம்ரான், அவர் யார் என்பது தனக்குத் தெரியாது எனவும் கூறியுள்ளார் எனத் தகவல்.

– சிரேஷ்ட ஊடகவியலாளர் ஆர்.சிவராஜா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *