மண்டைதீவில் காணி சுவீகரிப்பு தடுத்து நிறுத்தம்! – கடற்படையினர் மறுப்பு

யாழ்ப்பாணம் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தீர்மானத்தை மீறி கடற்படைக்கு காணி சுவீகரிக்கச் சென்ற நில அளவைத் திணைக்களத்தினரை மக்கள் முற்றுகையிட்டு வெளியேற்றிய சம்பவம் மண்டைதீவில் நேற்று நடைபெற்றது.

வேலணை பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட மண்டைதீவு கிழக்குப் பகுதியில் நிலைகொண்டுள்ள கடற்படையினர் அந்தப் பகுதியில் உள்ள 11 பேருக்குச் சொந்தமான 18 ஏக்கர் 1 நூட் 10 பேர்ச்சஸ் காணியை ஆக்கிரமித்து அதில் முகாமிட்டுள்ளனர். குறித்த படைமுகாம் அமைந்துள்ள காணியை நிரந்தரமாக சுவீகரித்து படை முகாமைப் பரவலாக்குவதற்கான நடவடிக்கைகளை கடற்படையினர் மேற்கொண்டுள்ளனர்.

இந்த நடவடிக்கையில் முதற்கட்டமாக குறித்த காணியை சட்ட ரீதியில் சுவீகரிப்பதற்கான முன்னெடுப்புக்களை கடற்படையினர் மேற்கொண்டு வருகின்றனர். இதன்படி குறித்த காணிகளை (நேற்று) சுவீகரிக்கவுள்ளதாகவும், அதற்கான நில அளவை நடவடிக்கைகளை மேற்கொள்ளப் போவதாகவும் நில அளவை திணைக்களத்தால் காணி உரிமையாளர்களுக்கு எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த விடயத்தை நில அளவைத் திணைக்களத்தினர் அண்மையில் நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திலும் பகிரங்கமாகக் கூறியிருந்தனர். தாங்கள் நில அளவை செய்யவுள்ள காணிகள் தொடர்பான விவரங்களையும் அவர்கள் முன்வைத்தனர்.

அந்தப் பட்டியல் தொடர்பில் ஆராய்ந்து அந்தக் காணிகளின் தேவை தொடர்பில் பிரதேச செயலர்களை அறிக்கை வழங்குமாறு இணைத் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா கோரியிருந்தார். அதனால் சுவீகரிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ள காணிகள் தொடர்பில் ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கும் வரை சுவீகரிப்புப் பணிகளை இடைநிறுத்துவது எனத் தீர்மானம் எடுக்கப்பட்டிருந்தது. அந்தத் தீர்மானத்தை மீறி நில அளவைத் திணைக்களத்தினர் தாங்கள் கூறியது போல் காணிகளை அளவிடும் நோக்குடன் நேற்று மண்டைதீவுக்குச் சென்றனர். எனினும், அங்கு மக்கள் திரண்டு நிலஅளவைத் திணைக்களத்தின் வாகனத்தை முற்றுகையிட்டனர். வெளியேறுமாறு கோசமிட்டனர். அரசியல் வாதிகளும் அங்கு கூடினர்.

காணிகளை அளவிட அனுமதிக்கமாட்டோம் என்று எழுத்தில் தரும்படி நில அளவைத் திணைக்களத்தினர் கேட்டுக் கொண்டனர். காணி உரிமையாளர்கள் அத்தனை பேருடைய கையெழுத்துக்களுடன் சம்பவ இடத்தில் வைத்தே அந்த விவரம் நில அளவைத் திணைக்களத்தினரிடம் வழங்கப்பட்டது. இதையடுத்து காணி அளவீட்டு முயற்சி முறியடிக்கப்பட்டது.

எனினும், குறித்த காணி அளவீட்டு முயற்சி அவற்றைச் சுவீகரிக்கும் நோக்கில் இடம்பெறவில்லை. அரச, தனியார் காணிகளை அளவிடவே முனைந்தோம் என்று கடற்படைப் பேச்சாளர் இசுறு சூரிய பண்டார தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *