‘கை’ , ‘மொட்டு’ சங்கமம் – 3 ஆம் சுற்றுப் பேச்சு திட்டமிட்ட அடிப்படையில் நடைபெறும்!

ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்கும், ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்குமிடையிலான மூன்றாம் சுற்றுப் பேச்சு எதிர்வரும் 10 ஆம் திகதி திட்டமிட்ட அடிப்படையில் நடைபெறும் என்று பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் இன்று (06) தெரிவித்தார்.

எனினும், புதிய அரசியல் கூட்டணி அமைக்கும் முயற்சி வெற்றிபெறவேண்டுமென்றால் சுதந்திரக்கட்சி இனியாவது நம்பிக்கையளிக்கும் வகையில் செயற்பட வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

2019 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டம்மீதான இறுதி வாக்கெடுப்பின்போது அதற்கு எதிராக வாக்களிக்குமாறு சுதந்திரக்கட்சியிடம், பொதுஜன பெரமுன கோரிக்கை விடுத்திருந்தது. எனினும், வாக்கெடுப்பில் பங்கேற்காமல் சுதந்திரக்கட்சி நழுவியது.

எனவே, அக்கட்சியுடன் இனியும் இணைந்து பயணிக்க கூடாது என கூட்டுஎதிரணி எம்பிக்கள் சிலர் வலியுறுத்திவருவதால் மூன்றாம் சுற்று பேச்சு ஒத்திவைக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில் இது தொடர்பில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸிடம் வினவியபோது,

” இரு அணிகளுக்குமிடையிலான மூன்றாம் சுற்றுப்பேச்சு திட்டமிட்ட அடிப்படையில் நடைபெறும். இதன்போது நம்பிக்கையுடன் செயற்படுவது குறித்து கலந்துரையாடப்படும். நம்பிக்கை இல்லாவிட்டால் முன்நோக்கி பயணிக்கமுடியாது.” என்று குறிப்பிட்டார்.

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும், ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும் இணைந்து புதிய அரசியல் கூட்டணி அமைப்பது தொடர்பான  இரண்டாம் சுற்றுப் பேச்சு மார்ச் 21 ஆம் திகதி நடைபெற்றது.

இதன்போது 20 விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதுடன், மூன்றாம் சுற்றுப் பேச்சுக்கான திகதியாக ஏப்ரல் 10 ஆம் திகதி நிர்ணயிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *