இந்துக் கல்லூரியில் ஹபாயாவுக்கு தடை விதித்தது தவறு!

முஸ்லிம்களின் கலாசார ஆடையான ஹபாயாவை தடை செய்ததன் ஊடாக, திருகோணமலை ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரி மனித உரிமையை மீறியுள்ளதாக இலங்கை மனித உரிமை ஆணைக்குழு தெரிவிக்கின்றது.

ஹபாயா ஆடையை அணிந்து பாடசாலைக்கு வருகைத் தந்த நான்கு ஆசிரியர்களை வேறு பாடசாலைக்கு இடமாற்றம் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்திருந்தனர்.

இந்நிலையில், இந்த சம்பவத்திற்கு எதிராக 2018ஆம் ஆண்டு மே மாதம் 21ஆம் திகதி இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் திருகோணமலை கிளையில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருந்தது.

பாதிக்கப்பட்ட கல்லூரி ஆசிரியர்களால் இந்த முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருந்தது.

இந்த முறைப்பாட்டின் பிரதிவாதிகளாக திருகோணமலை ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரியின் அதிபர், திருகோணமலை கல்வி வலய பணிப்பாளர்,

கல்வி அமைச்சின் மாகாண பணிப்பாளர் மற்றும் கல்வி அமைச்சின் செயலாளர் ஆகியோர் பெயரிடப்பட்டிருந்தனர்.

இவ்வாறு செய்யப்பட்ட முறைப்பாட்டை அடுத்து, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தற்போது அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் பாடசாலையின் அதிபரிடம் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணைகளை நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

திருகோணமலை ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரி 1923ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்டதாகவும், அன்று முதல் இன்று வரை இந்து கலாசாரத்தை பேணிய வகையிலேயே பாடசாலை நடத்தி செல்லப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பெண் ஆசிரியர்கள் பாடசாலைக்கு வருகைத் தரும் சந்தர்ப்பத்தில் புடவை அணிந்து வருகைத் தர வேண்டும் என ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டதாக அதிபர், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு முன்னிலையில் குறிப்பிட்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட நான்கு முஸ்லிம் ஆசிரியைகளும் 2013, 2014, 2016 மற்றும் 2018 ஆகிய ஆண்டுகளில் பாடசாலைக்கு ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டிருந்ததாக சுட்டிக்காட்டியுள்ள அதிபர், அன்றே பாடசாலையின் விதிமுறைகள் அவர்களுக்கு வழங்கப்பட்டதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமது பாடசாலை இந்து கலாசாரத்தை பின்பற்றுகின்ற பாடசாலை என்பதனால், ஹபாயா ஆடை, பாடசாலையின் கலாசாரத்திற்கு ஏற்புடையது அல்லவென பாடசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

இலங்கை அரசியலமைப்பின் 10ஆவது சரத்திற்கு அமைய, சமய சுதந்திரத்தை பாதுகாப்பதற்கு இலங்கையிலுள்ள தேசிய பாடசாலைகள் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் என்பதுடன்,

உரிமைகளை மீற முடியாது எனவும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அறிக்கையின் மூலம் சுட்டிக்காட்டியுள்ளது.

அரசியலமைப்பின் 12(1) மற்றும் 12(2) ஆகிய சரத்துக்களுக்கு அமைய, முறைப்பாட்டாளர்களுக்கு கிடைக்க வேண்டிய உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

ஒருவரின் உரிமைகள் மற்றும் சுதந்திரத்தை பாதுகாப்பதற்காக மற்றுமொரு நபரின் சமய சுதந்திரத்தை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து, ஹபாயா ஆடையை தடை செய்வது முறையற்ற ஒன்று எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த சர்ச்சை தொடர்பில் சமூக வலைதளங்களில் வெளியான விடயங்கள் தொடர்பிலும் தாம் கவனம் செலுத்தியுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

ஒரு தரப்பிடம் விடயங்களை ஆராயாமல், சமூக வலைத்தளங்களில் தகவல்களை பரிமாறிக் கொள்கின்றமை, தமது பொறுப்புக்களை மீறும் செயற்பாடு என ஆணைக்குழு சுட்டிக்காட்டுகின்றது.

இந்த நடவடிக்கையானது, சமூகத்தில் இனங்கள் மற்றும் சமயங்களுக்கு இடையில் இன ரீதியிலான வைராக்கியத்தை ஏற்படுத்தும் செயற்பாடு எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது,

அத்துடன், இந்த செயற்பாட்டினால், முறைப்பாட்டாளர்கள் மற்றும் பிரதிவாதிகள் அச்சுறுத்தப்படுவதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *