கை கொடுக்க மறுத்த சு.க.மீது கண்டனக் கணை தொடுக்கிறது மஹிந்த அணி!

ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தீர்மானம் தொடர்பில்  ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளது.

‘பட்ஜட்’மீதான இறுதி வாக்கெடுப்பின்போது அதற்கு எதிராக வாக்களிக்குமாறு சுதந்திரக்கட்சியிடம், ஶ்ரீலங்க பொதுஜன பெரமுன கோரிக்கை விடுத்திருந்தது.

இது குறித்து சாதகமாக பரீசிலிக்கப்படும் என அறிவித்திருந்த சு.க. தனது முடிவை இறுதி நேரத்தில் மாற்றியது.இதன்படி இறுதிவாக்கெடுப்பில் பங்கேற்காமல் நடுநிலை வகித்தது.

சுதந்திரக்கட்சியின் இந்த முடிவானது ஐக்கிய தேசியக்கட்சியை மறைமுகமாக காப்பாற்றும் செயற்பாடு என பிரசன்ன ரணதுங்க எம்.பி. சுட்டிக்காட்டினார்.

” இரட்டை நிலைப்பாட்டில் இருக்கும் சுதந்திரக்கட்சியை நம்பமுடியாது என பலதடவைகள் நான் சுட்டிக்காட்டியுள்ளேன். எதிர்த்துக்கூட வாக்களிக்க துணிவற்றவர்கள் நாளை எப்படி ஐ.தே.க. அரசை எதிர்ப்பார்கள்?

சு.க.மீது மக்களுக்கு இன்று நம்பிக்கை இல்லை. எனவே, அக்கட்சியுடன் கூட்டணி அமைத்து பயணிப்பதா என்பது குறித்து பரீசிலிக்கவேண்டும்.” என்றும் அவர் கூறினார். அத்துடன், சிசிர ஜயக்கொடி, செஹான் சேமசிங்க ஆகியோரும், சுதந்திரக்கட்சிமீது கடும் விமர்சனக் கணைகளைத் தொடுத்துள்ளனர்.

அதேவேளை, ‘பட்ஜட்’டை தோற்கடிப்பதற்குரிய பொறிமுறை கூட்டுஎதிரணியிடம் இருக்கிவில்லை என சுதந்திரக்கட்சி பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

” ஜனாதிபதிக்குரிய ஒதுக்கீடுகளும் பட்ஜட்டில் உள்ளன. எனவே, அவரால் விடுக்கப்பட்ட கோரிக்கையையும் கருத்திற்கொண்டே வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாதிருக்க முடிவெடுத்தோம்.” என்றும் கூறினார்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *