தடைகளைத் தகர்த்தெறிந்து தீர்வு காண்பது மிக அவசியம்! – சம்பந்தன் வலியுறுத்து

புதிய அரசமைப்பு விடயத்தில் சில தடைகள் காணப்படுகின்றன எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் சுட்டிக்காட்டினார்.

இந்தத் தடைகளை அகற்றி தேசிய பிரச்சினைக்குத் தீர்வு காண்பது மிகவும் அவசியமானது எனவும் அவர் வலியுறுத்தினார்.

நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற வரவு – செலவுத் திட்ட குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“அரசமைப்பில் கொண்டுவரப்பட்ட 13ஆவது திருத்தம், நீடித்த தேசியப் பிரச்சினைக்குத் தீர்வைப் பெற்றுத்தரும் தருணத்தை திறந்துவிட்டிருந்தது. பிரிக்கப்படாத நாட்டுக்குள் தீர்வை வழங்குவதை அது உறுதிப்படுத்தியிருந்தது.

அத்துடன் நாட்டின் இறைமை, எல்லைப் பாதுகாப்பு என்பனவற்றையும் அது உறுதிப்படுத்தியிருந்தது. மேலும் மத்திய அரசு ஏனைய பகுதிகளுக்கு அதிகாரங்களைப் பகிர்ந்தளிக்கும் வழிமுறைகளையும் ஏற்படுத்தியிருந்தது.

இந்த நாடு மக்களுக்கானது. மாகாண சபைகள் மக்களுக்கான பிரதிநிதித்துவ அரசியலைப் பாதுகாக்கும் வகையில் ஒழுங்கமைக்கப்பட்டது. ஆனாலும், தீர்வுக்கான பயணம் முழுமை பெறவில்லை.

இந்த நடாளுமன்றம், புதிய அரசமைப்பை உருவாக்கும் நோக்குடன், அரசமைப்புக் கவுன்ஸிலாக மாற்றப்பட்டது. இருந்தபோதிலும் புதிய அரசமைப்பு உருவாக்கத்தில் சில தடைகள் காணப்படுகின்றன. தடைகளை நாம் அகற்றவேண்டும்.

நாடாளுமன்றத்தின் ஊடாக புதிய அரசமைப்பைக் கொண்டுவந்து தேசிய பிரச்சினைக்குத் தீர்வு காண்பது மிகவும் அவசியமானது” – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *