யார் என்னதான் சொன்னாலும் கலப்பு நீதிமன்றத்தை ஏற்கோம்! – ரணில் திட்டவட்டம்

* அனுசரணை வழங்கினால் தீர்மானங்களை ஏற்பதாக அர்த்தமில்லை
* இறையாண்மையை பாதிக்காதவற்றையே நடைமுறைப்படுத்துவோம்
* சர்வதேச குற்றவியல் நீதிமன்றுக்கு இலங்கையைக் கொண்டு செல்லவே முடியாது
* அரசமைப்பை மதித்து தமிழ்க் கூட்டமைப்பு நடக்கவேண்டும்
* பழைய சம்பவங்களைக் கிளறினால் மீண்டும் வன்முறை வெடிக்கும்

“இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு எமது அரசு இணை அனுசரணை வழங்கியதால் அந்தத் தீர்மானங்களில் உள்ள அனைத்துப் பரிந்துரைகளையும் நாம் ஏற்பதாக எவரும் அர்த்தம்கொள்ளக் கூடாது. நாட்டின் இறையாண்மையைப் பாதிக்காத பரிந்துரைகளை மட்டுமே நாம் நடைமுறைப்படுத்துவோம். எந்தக் காரணம் கொண்டும் நாம் கலப்பு நீதிமன்றப் பொறிமுறையை ஏற்கமாட்டோம். அதேவேளை, அரசையோ அல்லது எமது இராணுவத்தையோ சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் முன்னால் கொண்டுபோய் எவராலும் நிறுத்தவும் முடியாது.”

– இவ்வாறு அடித்துக் கூறினார் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க.

ஐ.நா. தீர்மானம் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் நாடாளுமன்றத்தில் நேற்றுமுன்தினம் உரையாற்றினார்.

அவரது உரையில், இலங்கை அரசு மூன்றாவது தடவையாகவும் வெளிநாட்டு நீதிபதிகளை உள்ளடக்கிய கலப்பு நீதிமன்ற பொறிமுறைக்கு இணங்கியுள்ளது. அவர்கள் அதனை மறுக்க முடியாது. சர்வதேச சமூகத்துக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றவேண்டும்.

நிறைவேற்றத் தவறினால் சர்வதேச குற்றவியல் நீதிமன்றுக்கு இலங்கையைக் கொண்டு செல்வோம் என்று குறிப்பிட்டிருந்தார்.

சர்வதேச ஊடகத்தின் கொழும்புச் செய்தியாளர் ஒருவர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் இது தொடர்பில் கேள்வி எழுப்பியிருந்தார்.

அதற்கு ரணில் விக்கிரமசிங்க அளித்த பதிலில் மேலும் தெரிவித்ததாவது:-

“இலங்கையின் அரசமைப்பை மதித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நடக்க வேண்டும். எமது இராணுவத்தை சர்வதேச விசாரணை ஊடாக அல்லது சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் ஊடக தண்டிக்க எமது நாட்டின் அரசமைப்பில் இடமில்லை.

தமிழ் மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளை நாம் தீர்த்துவைப்போம். அவர்களுக்கு அரசியல் தீர்வையும் நாம் வழங்குவோம்.

காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பங்களுக்கு இழப்பீடுகளையும் வழங்க நாம் நடவடிக்கை எடுத்துள்ளோம்.

போரின்போது இரு தரப்பினரும் தவறிழைத்துள்ளார்கள். அதற்காக நடந்து முடிந்த சம்பவங்களை நாம் திரும்பவும் கிளறினால் மீண்டும் வன்முறைக்கே வழிவகுக்கும்.

நாட்டின் நல்லிணக்கம் கருதி அனைவரும் ஓரணியில் புதிய பாதையில் பயணிக்க வேண்டும். இன ஒற்றுமையைப் பாதிக்கும் நடவடிக்கைளுக்கு இங்கு இனி இடமில்லை.

ஐ.நா. தீர்மானத்தின் அனைத்துப் பரிந்துரைகளையும் எம்மால் நடைமுறைப்படுத்த முடியாது. வெளிநாட்டு நீதிபதிகளை உள்ளடக்கிய கலப்பு நீதிமன்றப் பொறிமுறைக்கு இலங்கையில் இடமில்லை. இதனை ஐ.நா. மனித உரிமைகள் சபையில் வெளிவிவகார அமைச்சர் திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டார்” – என்றார்.
.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *