வடக்கில் மாற்று அரசியலுக்கு தலைமைத்துவம் வழங்க தயார் – லெப்டினென்ட் கேர்ணல் ரத்னபிரிய அறிவிப்பு!

” வடக்கில் மாற்று அரசியலுக்கு தலைமைத்துவம் வழங்குவதற்கு தயாராகவே இருக்கின்றேன்.” என்று முல்லைத்தீவு, விஸ்வமடு சிவில் பாதுகாப்பு படைப் பிரிவிற்கு பொறுப்பாக இருந்த லெப்டினென்ட் கேர்ணல் ரத்னபிரிய பந்து இன்று ( 24 ) அறிவித்தார்.

சிங்கள தொலைக்காட்சிக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இந்த அறிவிப்பை விடுத்தார்.

விஸ்வமடு சிவில் பாதுகாப்பு படைப் பிரிவிற்கு பொறுப்பாக இருந்த கேர்ணல் ரத்னபிரிய பந்துவுக்கு 2018 ஜனவரியில் இடமாற்றம் வழங்கப்பட்டது.

இதற்கு முல்லைத்தீவு பகுதி மக்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டதுடன், தாம் அவரை கடவுளாகவே கருதுவதாகவும் குறிப்பிட்டனர். எனினும் இடமாற்றம் உறுதிபடுத்தப்பட்டது. இதையடுத்து மக்கள் கண்ணீருடன் அவருக்கு விடைகொடுத்தனர்.

இந்நிலையில் அதிருப்தி காரணமாக பதவிகாலம் முடிவடைவதற்கு முன்னரே இராணுவ சேவையிலிருந்து  கேர்ணல் ரத்னபிரிய பந்து ஓய்வுபெற்றுள்ளார்.

இவ்வாறானதொரு பின்புலத்திலேயே அரசியலில் அதுவும் வடக்கு அரசியல் களத்தில் குதிப்பதற்கு விருப்பம் வெளியிட்டுள்ளார்.

தெரன தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘என்ன நடந்தது?’ ( மொகதவுனே) என்ற அரசியல் நிகழ்வில் பங்கேற்று ‘பட்,பட்’ கேள்விகளுக்கு பதில்களை வழங்கினார்.

கே – வடக்கு மக்களின் வாழ்க்கையை கட்டியெழுப்ப என்ன செய்யலாம்?

ப –  வடக்குக்கு செல்லும்போது வீதிகள் அழகாக காட்சியளிக்கின்றன. ‘காபட்’ இடப்பட்டுள்ளது. ஆனால், வடக்கிலுள்ள கிராம பகுதிகளுக்கு சென்றால் நிலைமை வேறு. கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் ஒரு சினிமா திரையரங்குகூட இல்லை.

போதை ஒழிப்பு குறித்து பேசப்படுகின்றது. ஆனால்,  உள் பகுதிகளில் எவருக்காவது மது அருந்தவேண்டியேற்பட்டால் அந்த தேவையை சட்டபூர்வமாக பூர்த்திசெய்துகொள்வதற்கு வாய்ப்பில்லை. இதனால்தான் கிராமப்பகுதிகளில் சட்டவிரோத மதுபாவனை தலைதூக்குகின்றது.

கே – வடக்குக்கு இராணுவம் தேவையில்லை. முகாம்கள் அகற்றப்படவேண்டும் என ஏன் தொடர்ச்சியாக கோரிக்கைகள் விடுக்கப்படுகின்றன?

ப – வடக்கில் வாழும் சாதாரண மக்களால் குறித்த கோரிக்கை விடுக்கப்படுவதில்லை. அனர்த்த காலங்களில்கூட படையினர்தான் மக்களுக்கு உதவிசெய்கின்றனர். குறைகூறும் அரசியல் வாதிகள் சம்பவ இடத்துக்கு வருவதில்லை.

கே – அப்படியானால் எப்படி அங்குள்ள அரசியல்வாதிகளுக்கு ( தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு) பெரும்பான்மை ஆதரவு கிடைக்கின்றது?

ப – மாற்றுத்தேர்வு இல்லை. இதனால்தான் போட்டியிடுகின்ற வேட்பாளரை தெரிவுசெய்யவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

கே – வடக்கு மக்களின் ஆதரவு உங்களுக்கு இருக்கின்றது. அப்படியானால் நீங்களே மாற்று தேர்வாகலாமே?

ப – சவால்களை ஏற்பதற்கு தயாராகவே இருக்கின்றேன். இதில் அரசியல் என்பது ஒரு காரணி மாத்திரமே.

கே – அப்படியானால் அரசியலுக்குவர தயார் அல்லவா?

ப –  அதற்கு அப்பாலான சவால் என்றால்கூட அதையும் ஏற்பதற்கு தயாராகவே இருக்கின்றேன்.

வடக்கில் மாற்று அரசியலுக்கு தலைமைத்துவம் வழங்குவதற்கு தயாராக இருக்கின்றேன் என்பதை அவர் வெளிப்படையாக அறிவிக்காவிட்டாலும், மறைமுகமாக அதையே குறிப்பிடுகின்றார்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *