ஶ்ரீபாத கல்லூரிக்கு தோட்டப்பகுதி அல்லாத மாணவர்களையும் உள்வாங்க நடவடிக்கை!

ஸ்ரீபாத கல்வியற் கல்லூரிக்கு எதிர்காலத்தில் பெருந்தோட்டத்துறை அல்லாத இந்திய வம்சாவளி மாணவர்களையும் உள்வாங்கும் வகையில் புதிய வர்த்தமானியை வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும் என்று விசேட பிரதேசங்களுக்கான அபிவிருத்தி அமைச்சர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

ஸ்ரீபாத கல்வியற் கல்லூரியில் கடந்த காலங்களில் ஏற்பட்ட முறுகல் நிலை தொடர்பான கூட்டம் இன்று (14) கொழும்பு விசேட பிரதேசங்களுக்கான அபிவிருத்தி அமைச்சில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் கல்வியற் கல்லூரிகளின் ஆணையாளர் கே.எம்.எச். பண்டார, ஸ்ரீபாத கல்வியற் கல்லூரியின் பீடாதிபதி ரமணி அபேநாயக்க, விரிவுரையாளர்களும் கலந்து கொண்டனர்.

இதன்போது ஸ்ரீபாத கல்வியற் கல்லூரியின் அபிவிருத்தி தொடர்பாகவும், கடந்த காலங்களில் ஏற்பட்ட சுமூகமற்ற சூழ்நிலை தொடர்பாகவும் விரிவாக ஆராயப்பட்டன.

இது தொடர்பாக தொடர்ந்து கருத்து தெரிவித்த அமைச்சர் இராதாகிருஷ்ணன்,

ஸ்ரீபாத கல்வியற் கல்லூரி தொடர்பாக கடந்த காலங்களில் பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. இது தொடர்பாக ஆராய்ந்த பொழுது அங்கு ஏற்பட்டுள்ள நிலைமைகளை சுமூகமான நிலைக்கு தற்பொழுது கொண்டு வரப்பட்டுள்ளது.

ஸ்ரீபாத கல்வியற் கல்லூரிக்கு கடந்த காலங்களில் பெருந்தோட்டதுறையை சார்ந்த மாணவர்கள் மாத்திரமே உள்வாங்கப்பட்டனர். பெருந்தோட்டதுறையில் கணித, விஞ்ஞான பாடங்களில் தேர்ச்சி பெற்றவர்கள் குறைவான எண்ணிக்கையினர் இருந்த காரணத்தினால் அந்த துறைக்கான ஆசிரியர்களை உருவாக்குவதில் பின்னடைவு ஏற்பட்டது.

எனவே எதிர்வரும் காலங்களில் இந்திய வம்சாவளி தமிழர்களை உள்வாங்குவதற்கான வர்த்தமானி அறிவித்தில் ஒன்றை வெளியிடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது நான் கல்வி இராஜாங்க அமைச்சராக இருந்த காலத்தில் எடுக்கப்பட்ட முடிவு என்பதையும் குறிப்பிட விரும்புகின்றேன்.

அதே நேரம் ஸ்ரீபாத கல்வியற் கல்லூரிக்கு மாதம் ஒரு முறை கல்வி அமைச்சில் இருந்து பணிப்பாளர் ஒருவரை அனுப்பி நிலைமைகளை ஆராய்ந்து கல்லூரியில் சுமூகமான நிலைமையை ஏற்படுத்தி கல்லூரியை சிறப்பாக கொண்டு செல்வதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.” என்று குறிப்பிட்டார்.

க.கிசாந்தன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *