பெருந்தோட்டப்பகுதி வீதிகளை அதிகாரசபை பொறுப்பேற்க வேண்டும்! முற்போக்கு கூட்டணி எம்.பிக்கள் சபையில் வலியுறுத்து!!

” பெருந்தோட்டப்பகுதிகளிலுள்ள வீதிகள்  பேரவலத்துடன், அநாதைகளாக காட்சியளிக்கின்றன. அவற்றை பொறுப்பேற்று புனரமைத்து – பிறப்புச்சான்றிதழ் வழங்குவதற்கு எந்த தரப்பும் முன்வருவதில்லை.

எனவே, இவ்விவகாரம் குறித்து நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி அமைச்சு, உரிய கவனம் செலுத்தி, விரைவில் தீர்வை முன்வைக்கவேண்டும்.”

இவ்வாறு தமிழ் முற்போக்கு கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சபையில் இன்று வலியுறுத்தினர்.

பெருந்தோட்டப்பகுதிகளிலுள்ள வீதிகள் புனரமைக்கப்படாமை தொடர்பில் நாடாளுமன்றத்தின் கவனத்தை ஈர்த்தும்

–  மேற்படி வீதிகள் அடையாளங்காணப்பட்டு அவற்றை புனரமைக்கும் – நிர்வகிக்கும் பொறுப்பு வீதி அபிவிருத்தி அதிகார சபையிடம் கையளிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியும் எம். திலகராஜ் எம்.பியால் சபை ஒத்திவைப்புவேளை பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டது.

குறித்த பிரேரணையை முன்வைத்து உரையாற்றிய அவர்,

புரட்டாசி  மற்றும் கந்தலோயா வீதிகளின் நிலை

”  நுவரெலியா, கண்டி, மாத்தளை, பதுளை, இரத்தினபுரி, களுத்துறை, குருணாகலை உட்பட இலங்கையில் 12 மாவட்டங்கள், பெருந்தோட்டங்கள் அமைந்துள்ள மாவட்டங்களாகவே பார்க்கப்படுகின்றன.

குறிப்பாக பெருந்தோட்டப்பகுதிகளிலுள்ள பாதைகள் தோட்டப்பாதைகளாகவே அடையாளப்படுத்தப்படுகின்றன. அவற்றை தோட்டக்கம்பனிகளே புனரமைக்க வேண்டும், செப்பனிட வேண்டும் என கூறப்பட்டாலும், அது நடப்பதாக தெரியவில்லை.

மாவட்ட மற்றும் பிரதேச அபிவிருத்தி ஒழுங்கிணைப்பு குழுக் கூட்டங்களின்போது, இது தொடர்பில் கேள்வி எழுப்பட்டாலும் பயன் கிடைப்பதாக தெரியவில்லை.

உதாரணமாக புஸல்லாவையிலிருந்து, புரட்டொப்புக்கு செல்லும் பாதை பல வருடங்களாக புனரமைக்கப்படாமலுள்ளது. இதற்கு பொறுப்புகூற அதிகார சபையொன்று இல்லை. கேகாலை மாவட்டத்திலுள்ள கந்தலோயாவுக்கு செல்லும் வீதிக்கும் இதேநிலைதான்.

அரசின் நிர்வாக – அபிவிருத்தி பொறிமுறைக்குள் தோட்டப்பகுதிகளையும் உள்வாங்கும் வகையில் பிரதேசசபை சட்டத்தில் திருத்தம் செய்தோம்.

எனவே, பெருந்தோட்டப்பகுதிகளிலுள்ள வீதிகளை அடையாளங்கண்டு, அவற்றை மாகாண அல்லது மத்திய அரசுகளின் கீழுள்ள வீதி அபிவிருத்தி அதிகாரசபையின்கீழ் கொண்டுவரப்படவேண்டும்.

அதேபோல் எம்.பிக்களின் கண் சிவந்துள்ளது, கறுப்பாக உள்ளது என்றெல்லாம் கண்டுபிடிப்புகளை செய்யும் நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர், அதே வேகத்தில் பெருந்தோட்டப்பகுதிகளிலுள்ள வீதிகளை கண்டறிந்து, அவற்றை புனரமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும்.” என்றார் திலகர் எம்.பி.

பெருந்தோட்ட வீதிகள் அநாதைகளாக….

பிரேரணையை வழிமொழிந்து உரையாற்றிய வேலுகுமார் எம்.பி.,

” இந்த நாட்டிலே ஒரு தரப்பினர் ( பெருந்தோட்ட மக்கள்)  பயன்படுத்தும் வீதிகள் உரிமையாளர்கள் அற்று, அநாதைகளாக்கப்பட்டுள்ளன. அவற்றை பொறுப்பேற்பதற்கோ அல்லது புனரமைப்புசெய்து பிறப்பு சான்றிதழ் வழங்குவதற்கோ எந்தவொரு தரப்பும் முன்வருவதில்லை.

இதுவரைகாலமும் அரச பொறிமுறை தோட்டப்பகுதியில் செயற்படவில்லை. அதற்கு தடையாக இருந்த சட்டம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

எனவே, இனியாவது கொள்கை அடிப்படையில் தோட்டப்பகுதி பாதைகள் நிர்வகிக்கும் – புனரமைக்கும் பொறுப்பை மாகாணசபைகள் அல்லது மத்திய அரசாங்கம் ஏற்கவேண்டும்.

அதிவேக நெடுஞ்சாலைகள் அமைக்கப்படும் யுகத்தில்தான், அடிப்படைவசதிகூடஇன்றி காட்சிதரும் தோட்டப்பகுதி வீதிகள் பற்றி கதைக்கின்றோம்.

இன்று கண்டியிலிருந்து கொழும்புக்கு 4, 5 மணிநேரங்களில் வந்துவிடலாம். ஆனால், கண்டியிலிருந்து அம்மாவட்டத்திலுள்ள வேறொரு தோட்டத்துக்கு செல்வதாக இருந்தால் ( 25 கிலோமீற்றருக்குகூட ) 5 மணிநேரத்தை செலவிடவேண்டியுள்ளது.” என்று சுட்டிக்காட்டினார்.ஸ

பதுளை மாவட்டத்துக்கு மட்டும் ரூ. 1500 கோடி தேவை

அதேவேளை, இவ்விவாதத்தில் உரையாற்றிய பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அ. அரவிந்தகுமார் எம்.பியும், பெருந்தோட்டப்பகுதிகளிலுள்ள வீதிகளின் அவலநிலை குறித்து சபையில் எடுத்துரைத்தார்.

” தோட்டப்பகுதிகளிலுள்ள வீதிகளை, தோட்ட நிர்வாகங்கள் உரிய வகையில் பராமரிப்பதில்லை. 1992 ஆம் ஆண்டில் பெருந்தோட்டங்கள் தனியார் மயப்படுத்தப்பட்ட பின்னர், அங்குள்ள பாதைகளுக்கு பொறுப்புகூறுவதற்கு எவரும் அற்ற நிலையே நீடிக்கின்றது.

மக்கள் பிரதிநிதிகளான நாங்கள், தோட்டப்பகுதிகளுக்கு சென்றால், எவ்வளவுதான் பிரச்சினைகள் இருப்பினும், வீதியை புனரமைத்து தாருங்கள் என்பதே மக்களால் முன்வைக்கப்படும் முதல் கோரிக்கையாக இருக்கும்.

பதுளை மாவட்டத்திலுள்ள தோட்டப்பகுதி வீதிகளை முழுமையாக புனரமைப்பதற்கு சுமார் ஆயிரத்து 500 கோடி ரூபா தேவைப்படுகின்றது.” என்றும் அரவிந்தகுமார் எம்.பி. கூறினார்.

இவ்விவாதத்தில் பதிலளித்து உரையாற்றிய உள்நாட்டலுவல்கள், உள்ளாட்சி மற்றும் மாகாணசபைகள் இராஜாங்க அமைச்சர் ஜே.சி., அலவத்துவல,

” சபை ஒத்திவைப்புவேளை பிரேரணை ஊடாக முன்வைக்கப்பட்ட கோரிக்கை குறித்து கவனம் செலுத்தப்படும். கம்பெரலிய ( ஊரெழுச்சி) திட்டத்தின்கீழ் வீதிகளை புனரமைப்பது சம்பந்தமாகவும் பரீசிலனை செய்யப்படும்.” என்று பதிலளித்தார்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *