மதவாதத்தைத் தூண்டுகின்ற செயற்பாடுகளைத் தவிர்க்க! – சார்ள்ஸ் எம்.பி. வலியுறுத்து

“மதவாதத்தைத் தூண்டுகின்ற செயற்பாடுகளைத் தவிர்க்க வேண்டும். அனைவரும் பொறுமையாக – பொறுப்புணர்ச்சியுடன் செயற்பட வேண்டும்.”

– இவ்வாறு வலியுறுத்தியுள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன்.

மன்னார், திருக்கேதீஸ்வரம் சிவன் ஆலயத்துக்குச் செல்லும் வீதியில் அமைக்கப்பட்ட சிவராத்திரி வீதி வளைவு உடைத்து வீழ்த்தப்பட்டு அகற்றப்பட்டமை தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-

“நேற்றைய தினம் நடைபெற்ற சம்பவம் தொடர்பாக இன்று திருகேதீஸ்வர கோயில் நிர்வாகத்தினருடனும் மாந்தை பங்கு தந்தையிடமும் தனித்தனியாக சம்பவ இடத்துக்குச் சென்று உண்மை நிலவரங்களைக் கேட்டறிந்து கொண்டேன்.

இதுபோன்ற சம்பவங்கள் இனிமேலும் நிகழாதிருக்கவும் முரண்பட்ட இரு மதத்துகிடையில் ஒரு சந்திப்பை மேற்கொண்டு இதை சுமுகமாகத் தீர்க்க அனைவரும் முன்வரவேண்டும் எனவும், இச்சம்பவங்களால் எமது இனத்தில் அரசியல் இலக்குகள் திசைமாறிச் செல்ல நாம் ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லை எனவும் சம்மந்தபட்டவர்களிடம் தெரிவித்தேன்.

வன்முறைகளால் எந்தவிதமான ஒரு தீர்வையும் நாம் அடைந்துவிட முடியாது. அனைவரும் பொறுமையாக – பொறுப்புணர்ச்சியுடன் செயற்பட முன்வரவேண்டும்.

இந்த அசம்பாவித செயலைப் பயன்படுத்தி பல தீய சக்திகள் நாசகார வேலைகளில் ஈடுபடுவதற்கு முன்வருவார்கள். ஆகவே, எமது இனத்தின் முறுகலை சுமுகமாகப் பேசி அல்லது சட்டத்தை நாடி ஒரு முடிவுக்கு நாம் அனனைவரும் வரவேண்டும்.

இது தொடர்பாக இந்து கலாசார அமைச்சர் மனோ கணேசன் என்னைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு கேட்டறிந்துகொண்டார்.

தமிழ் மக்களுக்கிடையில் பிரிவினையை ஏற்படுத்தி இதில் குளிர்காய பல தீய சக்திகள் எமக்குள் ஊடுருவியுள்ளனர். ஆகவே, அனைவரும் பொறுப்புணர்ச்சியுடன் மதங்களை மதித்து இந்நேரத்தில் செயற்படுமாறு கேட்டுக்கொள்கின்றேன்” – என்றுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *