மதுஷின் வடக்கு போதைப்பொருள் விநியோகப் பொறுப்பாளர் பொட்டு அம்மானின் உறவினரா?

மாக்கந்துர மதுஷ் மற்றும் அவரது சகாக்கள் பலர் கைதுசெய்யப்பட்ட பின்னர் வெளிவரும் தகவல்கள் அதிர்ச்சியைத் தந்து கொண்டிருக்கின்றன.

சில அரச அதிகாரிகளை நேரடியாக டீல் பண்ணிய மதுஷின் சகாக்கள் காணி அபகரிப்பு மற்றும் இதர பல சட்டவிரோத செயற்பாடுகளுக்காக அந்த அதிகாரிகளை மிரட்டியுள்ளனர் என்று பொலிஸாருக்கு தகவல்கள் கிடைத்துள்ளன…

அதுவும் இலேசான மிரட்டல்கள் அல்ல…

ஒரு அதிகாரியிடம் அனுமதி ஏதும் கிடைக்காத பட்சத்தில் அவரின் குடும்ப விபரங்களைத் திரட்டி அதனை சொல்லி அவரை மிரட்டுவது இவர்களின் வேலையாக இருந்திருக்கின்றது.

காணி விவகாரம் ஒன்றில் கடும்போக்கைப் கடைப்பிடித்த அதிகாரி ஒருவரை மிரட்டிய மதுஷின் சகாக்கள் – அவரின் மனைவி வேலைக்குச் செல்வது முதல் பிள்ளைகள் பாடசாலை சென்று வருவது வரை அனைத்து விபரங்களையும் சொல்லி – குறிப்பிட்ட விடயத்துக்கு அனுமதி கிடைக்காத பட்சத்தில் பல விளைவுகளை சந்திக்க வேண்டி வரும் என்று எச்சரித்துள்ளனர்.

இப்படி பல விடயங்கள் பொலிஸ் விசாரணைகளில் வெளிவந்துள்ளன.

முரண்பாடான தகவல்கள்

மதுஷ் விவகாரம் குறித்து பாதுகாப்புத்துறையின் உயர்மட்ட அதிகாரிகள் தவறான தகவல்களைப் பரப்பி வருகின்றனர் என்று அரச உயர்மட்டத்திற்கு தகவல்கள் கிடைத்துள்ளன.

இப்போது நடக்கும் விசாரணைகளை குழப்பும் நோக்கம் – பதவி உயர்வு பிரச்சினைகள் மற்றும் முக்கிய பாதுகாப்புத்துறை அதிகாரிகளைக் காப்பாற்றும் முயற்சிகள் இதன் பின்னணியாக இருக்கும் என்று அரசு கருதுகின்றது எனத் தெரிகின்றது.

மதுஷிடம் ஆயிரம் கோடி ரூபா பணம் இருந்தமை – டுபாய் செல்ல அதிகாரிகளுக்கு விசா மறுக்கப்பட்டமை – டீ ஐ ஜி லத்தீப் டுபாய் சென்றமை உட்பட்ட விடயங்கள் அப்படியான பின்னணியில் வந்த போலி செய்திகளே… இதன் பின்னணியில் ஐக்கிய தேசியக் கட்சியின் அமைச்சர் ஒருவர் இருக்கின்றார் என ஜனாதிபதிக்குத் தகவல்கள் கிடைத்துள்ளன.

டுபாய் நீதிமன்றம் ஒரு தீர்ப்பைச் சொல்லும் வரை மதுஷ் விடயத்தில் இலங்கை ஒன்றும் செய்ய முடியாது. அவர்கள் நடத்தும் விசாரணைகளின்போது கிடைக்கும் சில தகவல்களைப் பரிமாறுகின்றபோது – தொலைபேசி அழைப்பு விபரங்களை வைத்து இலங்கை இப்போது விசாரணைகளை செய்து கொண்டிருக்கிறது.

ஆனால், போதைப்பொருள் விற்பனை செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டால் மரண தண்டனைதான். அப்படியில்லாமல் போதைப்பொருள் பாவித்திருப்பது தெரியவந்தால் நீண்டகால சிறைத்தண்டனை கிடைக்கும். அந்தக் காலப்பகுதி முடிந்து அல்லது அந்தக் காலப்பகுதிக்குள் பொதுமன்னிப்பு கிடைத்தால் இவர்கள் நாடுகடத்தப்படுவார்கள். இலங்கை அரசிடம் ஒப்படைக்கப்படுவார்கள். அதன் பின்னர் இலங்கை தனது விசாரணைகளை தொடரலாம்.

மதுஷின் கெட்ட காலம்

மாக்கந்துர மதுஷின் பிறந்த நாள் நேற்றாகும். 1979ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 24ஆம் திகதி அவர் பிறந்தார். பிறந்தநாளையொட்டி நேற்றும் அவர் விசேட விருந்துபசாரம் ஒன்றை டுபாயில் ஏற்பாடு செய்திருந்தார். ஆனால், அவரின் கைதையொட்டி எல்லாமே புஷ்வாணம் ஆகியது.

உண்மையில் இந்தப் பிறந்தநாள் நிகழ்வில் இலங்கையில் இருந்து சென்று பல முக்கியஸ்தர்கள் கலந்துகொள்ளவிருந்தனர். இந்த விருந்து நிகழ்வை இலக்கு வைத்தே இலங்கை அரச புலனாய்வுத்துறை செயற்பட்டு வந்தது. ஆனால், அதற்குள் எல்லோரும் ஒரே இடத்தில் சிக்கிக் கொண்டதால் தாமதிக்காமல் முன்கூட்டி டுபாய்க்கு அறிவித்து வலையில் சிக்க வைத்தது இலங்கை.

தனுசு ராசி கும்ப லக்கினத்தினைக் கொண்ட மதுஷுக்கு கடந்த பல மாத காலங்கள் முதலாக நேர காலம் சரியில்லை என்று அவரது சோதிடர்கள் தெரிவித்திருந்ததால் அதற்கமைய பரிகார பூஜைகள் கூட நடந்திருக்கின்றன. அதற்கு மேல் அவரது நண்பர்கள் கதிர்காமத்தில் விசேட பூஜைகளையும் நடத்தினார்கள் என்று தகவல் கசிந்துள்ளது.

கணினி விற்பன்னர் ஒருவரின் உதவியுடன் இரத்தினக்கல் கொள்ளை நுட்பமாக நடந்தது பற்றி எழுதி இருந்தேன். மதுஷின் தந்தை இறந்த பின்னர் முழு இறுதிக்கிரியையும் நேரடியாக ஒளிபரப்புச் செய்து மதுஷுக்குக் காட்ட ஏற்பாடு செய்தவரும் இவர்தான்.

இரத்தினக்கல் கொள்ளையை மொரட்டுவவில் இருந்து மொபைல் செயலி (ஆப்) மூலம் பார்த்து இரத்தினக்கல் மிஸ் ஆகி எங்கும் சென்றுவிடக் கூடாதென நேரடியாக இவர் கவனித்துக் கொண்டிருந்ததையும் விசாரணைகளில் அதிகாரிகள் கண்டறிந்துள்ளதை குறிப்பிட விரும்புகின்றேன்.

தமிழ் முக்கியஸ்தர்கள்

மதுஷ் இலங்கையில் இருந்து இந்தியாவுக்குத் தப்பிச் சென்று பின்னரே டுபாய் செல்கின்றார்.

இந்தியாவில் இருந்து ரகு என்பவர் அனுப்பிய படகில் மதுஷ் இந்தியா சென்றுள்ளார். அந்தப் படகில் செல்லும் வரை அரசியல்வாதி ஒருவரின் வாகனத்தில் மதுஷ் சென்றுள்ளமை அறியப்பட்டுள்ளது. அந்த அரசியல்வாதி பற்றிய விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

மறுபுறம் மாக்கந்துர மதுஷின் வடக்கு மாகாணத்துக்கான போதைப்பொருள் விநியோகத்திற்குப் பொறுப்பாக செயற்பட்டவர் என்று கூறப்படும் துஷி எனப்படுபவர் குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.

பொட்டு அம்மானின் உறவினர் என்று சொல்லியே மாக்கந்துர மதுஷிடம் நெருங்கியுள்ள இவர் அரச புலனாய்வுத்துறை அதிகாரி ஒருவருடன் நெருக்கமாக இருந்துள்ளமையும் – ஜனாதிபதி மைத்திரியின் வடக்கு பிரதேச பயணங்களின்போது அவற்றில் கலந்துகொள்ள முயன்றிருப்பதும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இதற்கிடையில் கொக்கெய்ன் போதைப்பொருள் பாவித்த அரசியல்வாதிகள் பலர் இப்போது அவற்றை உடம்பில் இருந்து நீக்கும் வழிவகைகளை ஆராய்ந்து வருகின்றனர் எனத் தகவல்.

அதிலும் தமிழ் அரசியல் கட்சி ஒன்றின் தலைவர் தமிழ்நாட்டின் சித்த மருத்துவத்தை நாடி இருப்பதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் சொல்கின்றன.

அப்படி செய்த பின்னர் – மருத்துவ பரிசோதனை ஒன்றை இலங்கையில் செய்து போதைப்பொருள் பாவனையில் தாம் ஈடுபடுவதில்லை என்பதை நிரூபிக்கவே அவர் தயாராகி வருகின்றார் எனச் சொல்லப்படுகின்றது.

இப்போது…

இதற்கிடையே நேற்று ஞாயிற்றுக்கிழமை (24) கொழும்பில் கைப்பற்றப்பட்ட பெருந்தொகை போதைப்பொருள் குறித்து பல முக்கிய தகவல்கள் பொலிஸாருக்குக் கிடைத்ததுள்ளன என்று சொல்லப்படுகின்றது.

அதனடிப்படையில் அதிரடியாக பல முக்கிய புள்ளிகள் இன்னும் சில தினங்களில் கைதுசெய்யப்படலாம் என்று தெரிகின்றது.

இன்றைய கைது நடந்தவுடன் டீ ஐ ஜி லத்தீப்பை தொலைபேசியில் வாழ்த்திய ஜனாதிபதி மைத்திரி – இதன் பின்னணியில் இருக்கும் தரப்பு குறித்து கேட்டறிந்தாராம்… பின்னர் போதைப்பொருள் தடுப்புப் பிரிவுக்குச் சென்ற மைத்திரி கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களைப் பார்வையிட்டார்.

பின்னர் நீதிமன்றம் கொண்டுசெல்லப்படவிருந்த சந்தேகநபர்களை தூரத்தில் இருந்து நோக்கிய ஜனாதிபதி, “அநியாயமாக தமது எதிர்காலத்தை இவர்கள் வீணாக்கிக் கொண்டனர். இனி சட்டம் தனது கடமையை செய்யட்டும்…” என்று கூறிவிட்டு அங்கிருந்து வெளியேறி விட்டார்..

விசாரணைகள் – அதிரடி கைதுகள் தொடர்கின்றன..

புதிய தகவல்கள் கிடைத்தால் தருவேன்…

– சிரேஷ்ட ஊடகவியலாளர் ஆர்.சிவராஜா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *