டெங்கு ஒழிப்புக்கு சென்றவர் மாடியிலிருந்து விழுந்து மரணம்! சிறுநீரகங்களை தானமாக வழங்கிய குடும்பம்!!

மூன்றாம் மாடியில் இன்று ( 18)  டெங்கு நுளம்பு பரிசோதனையில் ஈடுபட்டிருந்த டெங்கு பரிசோதனை அதிகாரியொருவர், மாடியிலிருந்து கீழே விழுந்து உயிரிழந்துள்ளார்.

கப்பில செனவிரத்ன என்பவரே, மாடியிலிருந்து விழுந்து, மரணமானவராவார். இவர் 49 வயது நிரம்பிய இரு பிள்ளைகளின் தந்தையுமாவார்.

பதுளை மாநகரில் மூன்று மாடிகளைக் கொண்ட வர்த்தக நிலையமொன்றில் நுளம்புகள் பரவும் வகையிலான செயற்பாடுகள் நிலவுவதாக கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து, பதுளை சுகாதார சேவை பணிப்பாளர் பணியக மூலம் இருவர் சென்று, டெங்கு பரிசோதனைகளை மேற்கொண்டிருந்தனர்.

அங்குள்ள பாதுகாப்பற்ற நீர்த்தாங்கியொன்றை சோதனையிடும் போது, கப்பில செனவிரட்ன என்பவர் கால் இடறி, மாடியிலிருந்து கீழே விழுந்து விட்டார்.

படுகாயமுற்ற அவர் உடனடியாக பதுளை அரசினர் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்ட போதிலும், சிகிச்சை பயனின்றி மரணமானார்.

அவர் மரணித்த பின்னர் அவரது சிறுநீரகங்களை தானம் செய்வதாக, குடும்ப உறுப்பினர்கள் நினைவுகூர்ந்து, மரணித்தவரின் ஆசையை டாக்டர்களிடம் வெளிப்படுத்தினர்.

இதையடுத்து டாக்டர்களான எஸ். சிவகரன், கயான்குரே, சமீத் பெர்ணந்து, ஆகியோர் உடனடியாக மேற்கொண்ட சத்திர சிகிச்சைகளின் பின்னர், கப்பில செனவிரட்னவின் சிறுநீரகங்களை எடுத்தனர்.

கப்பில செனவிரட்ன இறந்தாலும், அவரது சிறுநீரகங்கள் மூலம் மேலுமொரு உயிரைக் காப்பாற்ற முடிவதையிட்டு, டாக்டர்கள் கப்பில செனவிரட்னவின் குடும்பத்தினருக்கு நன்றியைக் கூறினர்.

எம். செல்வராஜா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *