கிரிக்கெட்டுக்கு ‘குட்பாய்’ சொல்கிறார் சிக்ஸர் மன்னன்!

அதிரடி துடுப்பாட்ட வீரரான கிறிஸ் கெய்ல், எதிர்வரும் உலகக்கிண்ணத் தொடருடன், சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வுபெறபோவதாக அறிவித்துள்ளார்.

1999 ஆம் ஆண்டு இந்தியாவுக்கு எதிரான முதலாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் மேற்கிந்தியதீவுகள் சார்பாக ஒருநாள் அறிமுகம் பெற்ற கிறிஸ் கெய்ல் அந்தப்போட்டியில் ஓர் ஓட்டத்துடன் ஆட்டமிழந்தார்.

அறிமுக போட்டியில் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை தந்தாலும் அடுத்த வந்த ஒவ்வொரு போட்டிகளிலும் கிறிஸ் கெய்ல் என்ற பெயர் வர்ணனையாளர்களாலும் கிரிக்கெட் ரசிகர்களாலும் உரத்து உச்சரிக்கப்பட்டதொரு பெயராக மாறிப்போனது.

அவர் சர்வதேச போட்டிகளில் விளாசிய அபாரமான சிக்சர்களும் கடினமான சூழலையையும் நகைச்சுவையாக மாற்றக்கூடிய ஆளுமையுமே அதற்குரிய காரணமாகும்.

39 வயதான கிறிஸ் கெய்ல் இதுவரையில் மேற்கிந்தியத்தீவுகள் அணிக்காக 284 சர்வதேச ஒருநாள் போட்டிகளில் விளையாடி 9727 ஓட்டங்களை குவித்துள்ளார்.

முன்னாள் நட்சத்திரமான பிரையன் லாராவுக்கு பின்னர் மேற்கிந்தியத்தீவுகள் சார்பாக அதிக ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள வீரரும் கிறிஸ் கெய்ல் ஆவார்.

சர்வதேச இருபதுக்கு 20 போட்டிகளிலும் ஐ.பி.எல். உள்ளிட்ட பிரிமியர் லீக் தொடர்களிலும் ஜனரஞ்சக வீரராக புகழப்படும் கிறிஸ் கெய்ல் சிக்சர் மன்னன் என செல்லமாக அழைக்கப்படுகிறார்.

அவர் டெஸ்ட் மற்றும் ஒருநாள் மற்றும் இருபதுக்கு 20 போட்டிகளில் மொத்தமாக 476 சிக்சர்களை விளாசியுள்ளார்.

செல்வம் கொழிக்கும் பிரிமியர் லீக் தொடராக கருதப்படும் ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இரண்டு சதங்களை விளாசிய ஒரேயொரு வீரர் கிறிஸ் கெய்ல் என்பதும் சிறப்பம்சமாகும்.

சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 23 சதங்களுடன் 49 அரைச்சதங்களை குவித்துள்ள கிறிஸ் கெய்ல், சர்வதேச இருபதுக்கு 20 அரங்கில் 2 சதங்களுடன் 13 அரைச்சதங்களை விளாசியுள்ளார்.

இவ்வருடம் தனக்கு அதிர்ஷ்டமானதொரு வருடமாக மாறிப்போயுள்ளதாகவும் எனவே எதிர்வரும் உலகக்கிண்ண கிரிக்கெட் தொடருடன் தான் கிரிக்கெட் அரங்கிலிருந்து ஓய்வு பெறுவதாகவும் கிறிஸ் கெய்ல் குறிப்பிட்டுள்ளார்.

2012 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளில் சர்வதேச இருபதுக்கு 20 உலகக்கிண்ணம் வென்ற மேற்கிந்தியத்தீவுகள் அணியில் கிறிஸ் கெய்லும் ஓர் அங்கத்தவராவார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *