தீர்வுத்திட்ட யோசனைகளுக்குப் பயந்து பேச்சுகளைப் புறக்கணித்தார் மஹிந்த! – சம்பந்தன் சாட்டையடி

“மஹிந்த ராஜபக்ச தலைமையிலான அரசுடன் அனைத்துச் சுற்றுப் பேச்சுகளிலும் நாங்கள் உண்மை முகத்துடன் பங்குபற்றினோம். எங்களின் தீர்வுத்திட்ட யோசனைகளுக்குப் பதிலளிக்கப் பயந்தே பேச்சு மேசைக்கு வராமல் மஹிந்த தரப்பினர் பின்வாங்கினர். பேச்சுகளை நாங்கள் குழப்பியடிக்கவில்லை. போலி முகத்தைக் காட்டிய அவர்களே குழப்பியடித்தனர்.”

– இவ்வாறு தெரிவித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்.

தமது ஆட்சியின்போது, தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வுகாணும் முயற்சி தோல்வி கண்டதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே முதன்மைக் காரணம் என்று முன்னாள் அரச தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான மஹிந்த ராஜபக்ச குற்றம்சாட்டியிருந்தார்.

தமிழ்ப் பத்திரிகைகள், இலத்திரனியல் ஊடகங்கள் ஆகியவற்றின் ஆசிரியர்கள் மற்றும் செய்திப்பொறுப்பாளர்களை, எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச, கொழும்பு விஜயராம மாவத்தையிலுள்ள தனது இல்லத்தில் நேற்றுமுன்தினம் சந்தித்து, சமகால அரசியல் நிலைவரங்கள் தொடர்பில் கலந்துரையாடினார். இதன்போதே மேற்படி குற்றச்சாட்டை அவர் முன்வைத்திருந்தார்.

இது தொடர்பில் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனிடம் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“மஹிந்த தரப்பினரே பேச்சுகளைப் புறக்கணித்தார்கள். இது நாட்டு மக்களுக்கும் சர்வதேச சமூகத்துக்கும் தெரிந்த விடயம். ஆனால், இப்போது மஹிந்த புதுக்கதை சொல்கின்றார்.

உண்மையை அவர் பேச வேண்டும். தம் மீதான பிழைகளை அவர் மறைக்க முற்படக்கூடாது.

மஹிந்த அரசுடன் அனைத்துச் சுற்றுப் பேச்சுகளிலும் நாங்கள் பங்குபற்றினோம். எங்களின் தீர்வுத்திட்ட யோசனைகளுக்குப் பதிலளிக்கப் பயந்தே பேச்சு மேசைக்கு வராமல் மஹிந்த தரப்பினர் பின்வாங்கினார்கள்.

எனினும், தற்போது எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் மஹிந்த ராஜபக்ச, எந்தவேளையிலும் எங்களுடன் பேச முடியும்.

தமிழ் மக்களின் எதிர்காலத் தீர்வுக்காக, எத்தகைய தரப்பினருடனும் பேச நாம் தயாராக இருக்கின்றோம்.

அந்தப் பேச்சுகள் நேர்மையானதாக – அர்த்தமுள்ளதாக இருக்க வேண்டும்.

காலத்தை வீணடிக்கும் வகையில் பேச்சுகள் இருக்கக்கூடாது” – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *