ரணிலுக்கு நிபந்தனையற்ற ஆதரவு கொடுக்கவேகூடாது கூட்டமைப்பு! – வலியுறுத்துகின்றார் சிவாஜிலிங்கம்

“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பச்சை நிறத்தின் மீது காதல் கொண்டு நிபந்தனை இல்லாமல் ஐக்கிய தேசியக் கட்சியை அல்லது ரணில் விக்கிரமசிங்கவை ஆதரிக்கவேண்டிய அவசியம் இல்லை. நிபந்தனையற்ற ஆதரவால் தமிழ் மக்களுக்கு எந்தவொரு பயனும் இல்லை.”

– இவ்வாறு தெரிவித்தார் வடக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம்.

சமகால அரசியல் நிலைமைகள் குறித்து நேற்று யாழ்.ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“சமகாலத்தில் உள்ள அரசியல் நிலைமையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பேரம் பேசக் கூடிய சக்தியுடன் உள்ளது. இந்நிலையில் மஹிந்த ராஜபக்‌ஷவை ஆதரிப்பதா? ரணிலை ஆதரிப்பதா? என்பதல்ல இப்போதுள்ள பிரச்சினை.

எவரை ஆதரித்தால் தமிழ் மக்களின் குறைந்தபட்ச பிரச்சினைகளையாவது தீர்க்க முடியுமா? என்பதையே பார்க்கவேண்டும். வெறுமனே பச்சை நிறத்தின் மீது காதல் கொண்டு ஐ.தே.கவை அல்லது ரணில் விக்கிரமசிங்கவை ஆதரிக்க முடியாது.

நிபந்தனையை ரணில் விக்கிரமசிங்கவிடம் மட்டும் விதிக்கவேண்டும் என்று அவசியம் இல்லை. மஹிந்த ராஜபக்‌ஷவுக்கும் கூட விதிக்கலாம். அதை விடுத்து கண்ணை மூடிக்கொண்டு எவரையும் ஆதரிக்கவேண்டிய அவசியம் கிடையாது.

அதேபோல் எல்லாப் பிரச்சினைகளுக்குமான தீர்வைக் கேட்காவிட்டாலும் பயங்கரவாதத் தடைச் சட்டம் நீக்கம், வடக்கு – கிழக்கு மாகாணங்கள் இணைப்பு போன்ற விடயங்களுக்கு உடனடித் தீர்வைக் கோரவேண்டும்” – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *