யாழ். போதனா வைத்தியசாலைக்கு 60 வீத சிற்றூழியர்கள் சிங்களவர்கள்!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் எதிர்வரும் 15ஆம் திகதி திறந்து வைக்கப்படவுள்ள அவசர விபத்துச் சிகிச்சைப் பிரிவுக்கு நியமிக்கப்படும் சிற்றூழியர்களில் 60 சதவீதமானோர் தென்பகுதியைச் சேர்ந்தவர்கள் என்று தெரியவருகின்றது.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அவசர விபத்துப் பிரிவு அமைக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 7ஆம் திகதி திறக்கப்படவிருந்த நிலையில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க யாழ்ப்பாணம் வருகைதரும்போது அதனைத் திறப்பதற்கு ஏற்றதாக திறப்பு விழா பிற்போடப்பட்டுள்ளது.

புதிதாக திறக்கப்படும் விபத்துப் பிரிவுக்கு 100 சிற்றூழியர்கள் தேவை என்று கணிக்கப்பட்டுள்ளது. அந்த வெற்றிடங்களை நிரப்பும் முயற்சியை சுகாதார அமைச்சு மேற்கொண்டுள்ளது.

தென்னிலங்கையைச் சேர்ந்தோருக்கு அந்த நியமனங்கள் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன. வடக்கு தமிழ் அரசியல்வாதிகள் எதிர்ப்பு வெளியிட்டதைத் தொடர்ந்து அவர்களின் பரிந்துரையின் பேரில் 40 பேருக்கு நியமனங்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது. எஞ்சியோர் தென்பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரியவருகின்றது.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தியைத் தொடர்புகொண்டு கேட்டபோது,

“புதிய சிகிச்சைப் பிரிவுக்கு 100 பேருக்கான வெற்றிடங்கள் இருக்கின்றன என்பது உண்மை. ஆனாலும், நியமன அதிகாரம் எமக்கில்லை. அது சுகாதார அமைச்சுக்குரியது.

நியமனம் வழங்கப்பட்டுள்ளதா என்பது எமக்குத் தெரியாது. எமது வைத்தியசாலைக்கு கடமையைப் பொறுப்பேற்க வரும்போது நியமனம் வழங்கப்பட்டமை தெரியவரும்” – என்றார்.

இந்த விவகாரம் தொடர்பில் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவிடம் கேட்டபோது,

“நாம் நியமனங்கள் வழங்கும்போது தமிழ், சிங்கள, முஸ்லிம் என்று பாகுபாடு பார்ப்பதில்லை. அனைத்து இனங்களைச் சேர்ந்தவர்களையுமே நியமிக்கின்றோம்.

அதேவேளை வடக்குக்கான நடவடிக்கைளின் போது பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் அறிவுறுத்தலுடன், அந்த மாகாணத்தைச் சேர்ந்த மக்கள் பிரதிநிதிகளுடன் பேசியே நடவடிக்கை எடுக்கின்றோம்” – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *