மன்சூரும் மனிதர்தான்….; சட்டத்தை செய்தால் சதிகாரரா?!

‘கிழக்கின் கல்வி வளர்ச்சி பின் தங்கியமைக்கு ஹபாயாவும் ஒரு காரணம்’ என்றதுடன் முஸ்லிம் ஆசிரியைகள் ஹபாயா அணியும் உடன்பாட்டுக்கு எதிராக கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.கே.எம். மன்சூர் மனித உரிமைகள் ஆனைக்குழுவில் கூறினார் எனும் குற்றச் சாட்டு பரவலாக பேசப்படுகின்ற இச் சந்தர்ப்பத்தில் இன்றையை தினம் அவர் இணையதள ‘ரீ.வி.’ ஒன்றிக்கு வழங்கியிருந்த பேட்டியில் சில தெளிவுகளை வழங்கியிருந்தார்.

இது விடயம் பரலடைகின்ற சந்தர்ப்பத்தில் குறித்த விடயத்தினை அலசுவதற்காக மாகாணக் கல்விப் பணிப்பாளரை தொடர்புகொள்ள எண்ணியிருந்த சந்தர்ப்பத்திலேயே அவரது பேட்டி நேரடியாக குறித்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்டிருந்தது.
அதில் அவர் குறுகிய சில நிமிடங்களுக்குள் தெளிவான கருத்தினை தெளிவாக வழங்கியிருந்தார். அங்கு தெரிவித்ததாவது,

“மேற்கண்டவாறு பரவி வருகின்ற செய்தி பொய்யானது. தான் எந்த சந்தர்ப்பத்திலும் அவ்வாறு கூறவில்லை என பகிரங்;கமாக கூறினார்”. மேலும், “மனித உரிமை ஆணைக்குழுவில் இவ் விடயம் சம்பந்தமான விசாரணை இற்றைக்கு இரண்டு மாதங்களுக்கு முன்னரே இடம்பெற்றது.

அவ்வாறு நான் கூறியிருந்தால் அந்த சந்தர்ப்பத்திலேயே (இரண்டு மாதங்களுக்கு முன்) வெளியிட்டிருக்கலாம் தானே! ஏன், இப்போது பேச வேண்டும். அப்படியனால் இப்படி ஒரு கதையை பரப்புவதற்காக கற்பனை செய்ய அவர்களுக்கு இரண்டு மாதம் தேவைப்பட்டிருக்கின்றது என்றுதான் கூற வேண்டும்.

அது மாத்திரமல்ல, நானும் ஒரு முஸ்லிம் எனது மனைவி பிள்ளைகளும் இஸ்லாமிய முறைப்படிதான் ஆடை அணிகின்றார்கள், எந்த சந்தர்ப்பத்திலாவது நான் இவ்வாறு பேச முடியுமா? வெறுமெனே பொய்யான பரப்புரையே இக் குற்றச்சாட்டு” – என்றார்.

மேலும், திருகோணமலை சண்முகா வித்தியாலய ஹபாயா விவகாரம் தொடர்பாக, தான் பதவியேற்ற பின்னர் குறித்த ஆசிரியைகள் அவர்களின் பணியை அதே பாடசாலையில் தொடர திகதியிடப்பட்ட இரண்டு கடிதங்கள் எனக்கு கல்வியமைச்சிடமிருந்து வந்த போதிலும் இறுதியாக வந்த கடிதம் திகதியிடப்படாமையை சாணக்கியமாக கையாண்டு இது விடயத்தினை அப்படியே அமைதியாக மூடிவிடலாம் என எண்ணியிருந்த போதிலும் அது மறைவதாக தெரியவில்லை.

பின்னர் எமக்கு வந்த ஒரு சேதி, இரண்டு தெரிவுகளுக்கு சந்தர்ப்பங்கள் வழங்கப்பட்டன.
வேறு ஏதாவது தேசிய பாடசாலைக்கு இடமாற்றம் செய்யலாம் அல்லது விருப்பம் தெரிவிப்பவர்களை மாகாண சபைக்குள் உள்வாங்கி மாகாண சபையின் கீழுள்ள பாடசாலையொன்றுக்கு இடமாற்றம் செய்யலாம். இதனடிப்படையில் ஒரு ஆசிரியரை அவரின் விருப்பத்தின் பிரகாரம் மாகாண சபைக்குள் உள்வாங்கி, ஏனையவர்களை வெவ்வேறு தேசிய பாடசாலைக்கும் இடமாற்றம் செய்தோம் – எனவும் தெரிவித்தார்.
இதனை வைத்து நோக்கும் போது தனிப்பட்ட ரீதியிலான உள்வாரியான தனிப்பட்ட குரோதங்களுக்காக தனி மனிதரை குற்றஞ்சாட்டுவதாக கூறி சமூகத்தின் மீதான பிரளயத்தை உருவாக்குவது தவறானது.

இவ்வாறு பேசியதாக கூறப்பட்ட விடயத்தின் பின்னனியில் சில விடயங்களை சிந்திப்போமேயானால், இற்றைக்கு 6 மாதங்களுக்கு மேலாக இடம்பெற்று வருகின்ற குறித்த பாடசாலையில் இடம்பெற்ற ஹபாயா விவகாரம் இது வரையில் வேறெந்த பாடசாலையிலும் தலைதூக்கவில்லை. அது மாத்திரமல்லாது திருமலை சண்முகா வித்தியாலயம் அவர்களது கலாசாரத்தின்படி அங்குள்ள சிலரின் தூண்டுதல் காரணமாக அவ்வாறு திணிக்கின்றதென்றால் நாம் அந்த இடத்தினை விட்டு விலகி நடப்பதே சிறந்தது.

இவ்விடத்தில் ‘நாங்களும் இலங்கையர் எமக்கும் அனைத்துப் பாடசாலைகளிலும் உரிமையுண்டு’ எனக் கூறிக் கொண்டிருந்தால் பிரச்சினை வலுத்து பரவத்தான்செய்யும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.

மார்க்கத்தின் பால் ஆடையை மாத்திரம் ஊதிப் பூதாகரமாக்க நினைப்பவர்கள், மார்க்கத்தின் பால் புரிந்துணர்வு, விட்டுக் கொடுப்பு பரஸ்பரம் என்பதையும் நிலைநாட்ட வேண்டுமல்லவா!

அனைத்திலும் முஸ்லிம்கள் நாம் நமக்கே உரிமையுண்டு என எண்ணி ஓரிரு சிறு பிரச்சினைகளுக்காக முழு சமூகத்தினதும் இனத் தூண்டல்களை விதைப்பது தவறு. ஒரு பாடசாலைக்குரிய கலாசாரத்தை எம்மால் பின்பற்ற முடியவில்iலை என்றால் அதிலும் நாங்கள் மிகவும் சிறுபாண்மையென்றால் விட்டுக்கொடுத்து நடப்பதே சாலச் சிறந்தது.

அதுபோக ஊதிப் பெரிதாக்கி பூகம்பமாக்கி ஏனைய பாடசாலைகளும் அவ்வாறான நிலைப்பாட்டை தோற்றுவிக்க வழிவகுக்க கூடாது. மேலும் அனைத்து இடங்களிலும் இனவாத கூற்றுடையோர் ஒரு சிலர் இருக்கத்தான் செய்வர் அவர்களின் நாசகார வித்தைகளுக்கு தீனி போடுபவர்களாக நாங்கள் ஒருபோதும் இருந்துவிடக் கூடாது.

இதே நேரம் இன்னுமொரு விடயத்தை பார்த்தோமேயானால், நாம் தொழில் செய்யும் இடம் மார்க்கத்துக்கு முரணானது என்றால் எவ்விடத்தைவிட்டு ஒதுங்குவது சிறந்தது. ஆனால், இது பாடசாலை விவகாரம் என்பதால் மாற்று வழியாக இடமாற்றத்தைப் பெற்று வேறு பாடசாலைகளுக்கு செல்ல முடியும் அதைவிடுத்து ஒரு சிலரது சுய நோக்கங்களுக்காக அதிகாரிகளை பொறி வலைகளுக்குள்ளாக்கி, சமூகத்தில் பிரளயத்தை ஏற்படுத்த வேண்டிய அவசியமே இல்லை.

‘நாங்கள் எமது கலாச்சாரப்படிதான் செல்வோம்’, ‘அதுவும் அண்மித்த அருகிலுள்ள பாடசாலைக்குத் தான் செல்வோம்’, எனவே ‘இதே பாடசாலைக்குத் தான் செல்வோம்’ என்றால் குழப்பம் தோன்றியவண்ணமே இருக்கும்.
நாம் உரிமை கோருவது போல் அவர்கள் பெரும்பாண்மையான பாடசாலையில் அவரவருக்கென்ற சில நடைமுறைகளை உரிமைகளாக கோருவர். அதற்கு ஒப்பாக செயற்படுவது எம்மால் முடியாமல் போகும் சந்தர்ப்பத்தில் ஒதுங்கி நிற்பதே சிறந்தது. இதற்கு சிறு உதாரணம் விருந்தினராகச் சென்ற வீட்டில் விடாப் பிடியாக ஆட்சியுரிமை கோருவது போலாகும்.

மேலும், எதற்கெடுத்தாலும் நாம் சார்ந்த விடயங்களை மாத்திரம் நியாயப்படுத்தி, எமது உரிமை, எமது வெற்றி என்ற கோஷத்துடன் செயற்பட்டால் ஆளுநர், மாகாண பணிப்பாளர், முதலமைச்சர் மற்றும் ஏனைய அதிகாரிகள் அவரவர் மார்க்கத்துக்கு மாத்திரம் சார்ந்து போய் உயரதிகாரிகள் அனைவரும் இனவாதிகளாகத்தான் செயற்பட வேண்டிவரும்.

“நமக்கு வந்தால் இரத்தம், மற்றவர்களுக்கு வந்தால் தக்காளி சட்னியா?”
தூங்குபவனை எழுப்ப முடியும், தூக்கம் போல் நடிப்பவனை எழுப்பவே முடியாது போல துவேஷங்களை கோஷங்களாக கொண்டவர்களிடம் மனிதாபிமானத்தை காண்பது கடினம். அவ்விடத்தில் அமைதி காத்து சமூகத்தில் குழப்பம் வராமல் பாதுகாக்க வேண்டும். அல்லது விலகி நடத்தல் மாத்திரமே புத்திசாலித்தனம், இது கோழைத்தனம் அல்ல!

 

~ கியாஸ் ஏ. புஹாரி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *