தற்கொலைக் குண்டுதாரிகளின் படத்தையும் பெயர்களுடன் வெளியிட்டது ஐ.எஸ். அமைப்பு

இலங்கையில் நேற்றுமுன்தினம் இடம்பெற்ற தொடர் வெடிகுண்டுத் தாக்குதல்களுக்கு உரிமை கோரியுள்ள ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பு, தாக்குலை நடத்திய தற்கொலைக் குண்டுதாரிகள் 7 பேரின் பெயர்களையும் படத்துடன் வெளியிட்டு சர்வதேச ரீதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தினத்தில் இலங்கையில் 3 தேவாலயங்கள், 3 பிரபல ஹோட்டல்கள் உட்பட 8 இடங்களில் நடத்தப்பட்ட வெடிகுண்டுத் தாக்குதல்களில் 321 இற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். அத்துடன், 500 இற்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

இரண்டு நாட்களின் பின்னர் இந்தத் தாக்குதல்களுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பு இன்று பகல் உரிமை கோரியிருந்த நிலையில், தாக்குதல்களை மேற்கொண்ட தற்கொலைக் குண்டுதாரிகள் என்று சொல்லப்படும் 7 பேரின் பெயர்களையும் படத்துடன் இன்றிரவு அது வெளியிட்டுள்ளது.

அபு ஒபைடா, அபு மொஹ்தார், அபு ஹலீல், அபு ஹம்ஸா, அபு அல் – பரா, அபு மொஹமட், அபு அப்துல்லா ஆகியோரே தற்கொலைக் குண்டுதாரிகள் எனப் பெயர்கள் வெளியிடப்பட்டுள்ளன.

இலங்கையில் தாக்குதல்களை மேற்கொள்வதற்கு முன்னர் அவர்கள் கூட்டாக சத்தியப்பிரமாணம் செய்யும் ஒரு நிமிடக் காணொளியும் இன்றிரவு வெளியிடப்பட்டுள்ளது.

தற்கொலைக் குண்டுதாரிகளின் படம் மற்றும் காணொளியை ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பின் அமாக் செய்தி நிறுவனமே வெளியிட்டுள்ளது.

குறித்த படம் மற்றும் காணொளியில் ஒருவர் மட்டுமே முகத்தைத் திறந்தவாறு உள்ளார். ஏனையோர் முகத்தை மறைத்தவாறு உள்ளனர். தௌஹீத் ஜமா அத் அமைப்பின் தலைவரான சஹ்ரான் ஹாசீம் என்பவரே முகத்தை மறைக்காமல் உள்ளார். இவரே தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களுக்குத் தலைமையேற்றார் என ஏற்கனவே செய்திகள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

படத்தில் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பின் கொடிக்கு முன்னால் சஹ்ரான் ஹாசீம் கையில் துப்பாக்கியை வைத்துள்ளார். ஏனையோர் கைகளில் கத்திகளை வைத்துள்ளனர்.

காணொளியில் தௌஹீத் ஜமா அத் அமைப்பின் தலைவரான சஹ்ரான் ஹாசீமின் கைமேல் கைகளை வைத்து சத்தியப் பிரமாணம் செய்யும் காட்சியே உள்ளது. அதில், ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பின் தலைவர் அபூபக்கர் அல் பக்தாதிக்கு விசுவாசமாக இருப்போம் என அவர்கள் சத்தியப்பிரமாணம் செய்கின்றார்கள். பின்னர் வானத்தை நோக்கிக் கைகளை உயர்த்திக்கொள்கின்றார்கள்.

அபு ஹம்ஸா, அபு ஹலீல், அபு மொஹமட் ஆகியோர் கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயம், நீர்கொழும்பு கட்டுவபிட்டி புனித செபஸ்தியான் தேவாலயம், மட்டக்களப்பு சீயோன் தேவாலயம் ஆகியவற்றில் குண்டுகளை வெடிக்க வைத்து தற்கொலை செய்துள்ளனர்.

அபு ஒபைடா, அபு அல் – பரா, அபு மொஹ்தார் ஆகியோர் கொழும்பிலுள்ள ஷங்ரி – லா, சினமன் கிராண்ட், கிங்ஸ்பெரி ஹோட்டல் ஆகியவற்றில் குண்டுகளை வெடிக்க வைத்து தற்கொலை செய்துள்ளனர். இந்த மூவரில் ஒருவர்தான் சஹ்ரான் ஹாசீம் என்பது குறிப்பிடத்தக்கது. ஏனெனில், ஹோட்டல் ஒன்றில் இருந்தே சஹ்ரான் ஹாசீமின் உடல் சிதைவடைந்த நிலையில் மீட்கப்பட்டது.

அபு அப்துல்லா, தெமட்டகொட வீட்டில் குண்டை வெடிக்க வைத்து தற்கொலை செய்துள்ளார்.

தெஹிவளை மிருகக்காட்சி சாலைக்கு அருகில் உள்ள ஹோட்டலில் இடம்பெற்ற தாக்குதல் தொடர்பில் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பின் செய்திக் குறிப்பில் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

எனினும், ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பு வெளியிட்டுள்ள தற்கொலைக் குண்டுதாரிகளின் படத்தில் 8 பேர் உள்ளனர். ஆனால், 7 பேரின் விபரங்களையே அந்த அமைப்பு வெளியிட்டுள்ளது.

தாக்குதலுக்குத் தயாராக இருந்த மற்றைய தற்கொலையாளி பாதுகாப்புத் தரப்பினரால் கைதுசெய்யப்பட்டிருக்கவும் வாய்ப்புள்ளது. அல்லது, தாக்குதல் தொடர்பான அச்சத்தைத் தொடர வைக்கவும் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பு இந்த உத்தியைக் கையாண்டிருக்கலாம் எனவும் கருதப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *