சமஷ்டிக் குணாதிசயங்களுடன் வரவே வராது புதிய அரசமைப்பு! – பழைய கூற்றை மீண்டும் உறுதிப்படுத்துகின்றார் தவராசா

“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கூறுவதைப்போல் சமஷ்டிக் குணாம்சங்களுடன் கூடிய புதிய அரசமைப்பு வரப்போவதில்லை. ஒற்றையாட்சி அரசமைப்பே மீண்டும் வரப்போகின்றது என்பதை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அரசமைப்புப் பேரவையில் ஆற்றிய உரை அம்பலப்படுத்தியுள்ளது.”

– இவ்வாறு தான் முன்னர் கூறிய கூற்றை மீண்டும் திட்டவட்டமாகத் உறுதிப்படுத்தியுள்ளார் வடக்கு மாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா.

இது தொடர்பில் தான் வெளிப்படுத்திய அறிக்கையையே அண்மையில் ஊடகங்கள் பிரசுரித்தன என்றும், அதனை விளங்காதவர்களே விமர்சனங்களை முன்வைக்கின்றனர் எனவும், ஊடகங்கள் உண்மையையே சொல்லியுள்ளன எனவும், ஆதலால் அந்த ஊடகங்களை விமர்சிப்பதில் பயனில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“புதிய அரசமைப்புக்கான நிபுணர் குழு அறிக்கையில் சமஸ்டிக் குணாம்சங்கள் உள்ளன. அது தமிழ் மக்களின் ஒட்டுமொத்த அரசியல் அபிலாஷைகளையும் நிறைவேற்றாவிட்டாலும், அதனை ஒரு தற்காலிகத் தீர்வாக எடுத்துக் கொள்ளலாம் என நானும் கூறியிருந்தேன்.

ஆனால் கடந்த 11ஆம் திகதி அரசமைப்புப் பேரவையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நிபுணர் குழுவின் வரைவைச் சமர்ப்பித்து உரையாற்றும்போது, ஐக்கிய தேசியக் கட்சி தற்போதுள்ள அரசமைப்பின் சரத்து 2 மற்றும் சரத்து 9 ஆகியவற்றைப் பாதுகாத்தே புதிய அரசமைப்பைக் கொண்டுவரும் எனவும், நிபுணர் குழு அறிக்கையில் உள்ள விடயங்கள் அப்படியே வரும் என நம்பவேண்டாம் எனவும் கூறியிருக்கின்றார்.

அதன் அர்த்தம் வரப்போகும் புதிய அரசமைப்பு சமஸ்டி குணாம்சங்களைக் கொண்டதாக இருக்கப்போவதில்லை என்பதே. அது ஒற்றையாட்சி அரசமைப்பே என்பது அம்பலமாகியிருக்கிறது.

இதனை நான் முன்னரும் கூறியிருக்கும் நிலையில் அதனை வெளியிட்டுள்ள ஊடகங்கள் மீது விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. அந்த ஊடகங்கள் உண்மையை அப்படியே எழுதியுள்ளன. அதில் எந்தத் தவறும் இல்லை.

அப்படியிருக்க ஊடகங்கள் மீது விமர்சனங்களை முன்வைத்து பயனில்லை. என்னை யார் வேண்டுமானாலும் விமர்சிக்கலாம். அது அவர்களது உரிமை. ஆனால் எனது கருத்தைப் பிழையாக விளங்கிக் கொண்டால் அது எனது தவறல்ல. கருத்துக்களைக் கருத்துக்களால் எதிர்கொள்ள நான் தயாராக இருக்கின்றேன்.

2016ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் வெளியான வழிகாட்டல் குழுவின் அறிக்கையில் சொல்லப்பட்ட விடயங்கள் ஏற்றுக் கொள்ள கூடியவை என்பதை நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனுக்கு அடுத்த படியாக அதிகளவில் கூறியவன் நான்.

அப்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் கூட அமைதியாக இருந்தார்கள். எனவே பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் இந்தக் கருத்துக்குப் பின்னரும் புதிய அரசமைப்பு சமஸ்டிக் குணாம்சங்களுடன் கூடியதாக வரும் என நம்புவது ஒரு பகல் கனவு மட்டுமே” – என்றார்.

சிங்கள மக்களை அச்சப்படுத்தாமல் வைத்திருப்பதற்காகவே பிரதமர் உள்ளிட்ட அரசில் உள்ளவர்கள் இவ்வாறு பேசுவதாக கூட்டமைப்பு கூறும் கருத்து தொடர்பாக ஊடகவியலாளர்கள் தவராசாவிடம் கேள்வி எழுப்பியபோது,

“பிரதமர் அரசியல் மேடைகளில் கூறிய கருத்து குறித்து நான் கவனம் செலுத்தவில்லை. ஆனால் நான் கூறும் மேற்கண்ட கருத்தைப் பிரதமர் அரசமைப்புச் சபையில் கூறியிருக்கின்றார். சாதாரணமாகக் கருத்துக் கூறுவதற்கே பயப்படுகிறார்கள் என்றால் எப்படி அரசமைப்பை நிறைவேற்றப் போகின்றார்கள்?” – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *