உலகின் மிகப் பழமையான கிராம்பு, மிளகுகள் மாந்தையில் கண்டுபிடிப்பு

மன்னார் – மாந்தையில் அகழ்வு ஆராய்ச்சியின் போது, கண்டுபிடிக்கப்பட்ட கிராம்பு, உலகின் மிகப் பழமையான கிராம்பு (லவங்கம்) என்று தொல்பொருள் ஆய்வாளர்கள் நம்புகிறார்கள் என அனைத்துலக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அதேவேளை,  பழமையான  மாந்தை துறைமுகத்தில்  மிகப்பெறுமதி வாய்ந்த கருப்பு மிளகுகள் தொடர்பான சான்றுகளையும் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

போர் முடிவுக்கு வந்த பின்னர், 2009/2010 காலப்பகுதியில்,  பன்னாட்டு ஆய்வாளர்கள் குழுவொன்று மாந்தை துறைமுகப் பகுதியில் அகழ்வாய்வில் ஈடுபட்டது.

சிறிலங்கா தொல்பொருள் திணைக்களம்,  சீலிங்ஸ், மற்றும் லண்டன் பல்கலைக்கழக கல்லூரியின் தொல்பொருள் நிறுவகம் ஆகியன இணைந்து இந்த ஆய்வில் ஈடுபட்டிருந்தன.

இதன்போது, கண்டுபிடிக்கப்பட்ட கிராம்பு, கி.பி 900 ஆம் ஆண்டுக்கும் 1100 ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தைச் சேர்ந்தது என்று கண்டறியப்பட்டுள்ளதாக, ஆய்வாளர் Eleanor Kingwell-Banham தெரிவித்துள்ளார்.

இது, இது ஆசியாவின் மிகப் பழைய கிராம்பு மாத்திரமல்ல, உலகிலேயே மிகப் பழமையான கிராம்பு என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, இங்கு கண்டுபிடிக்கப்பட்ட எட்டு மிளகுகள், கி.பி 600 தொடக்கம் 700 ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்டதாக இருக்கலாம் என்றும் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

இதுதொடர்பான ஆய்வு முடிவுகளை அவர்கள் அண்மையில் வெளியிட்டுள்ளனர்.

அதேவேளை, அண்மையில் சீனா தொல்பொருள் ஆய்வாளர்களும் மாந்தை துறைமுகத்தில் அகழ்வாய்வுகளில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *