தமிழர்களை ஏமாற்றுகின்றனர் ரணில் – சம்பந்தன் – சுமந்திரன்! – மஹிந்த காட்டம்

“தொத்துப் பொறியில் அல்லாடும் இந்த அரசின் கீழ் புதிய அரசமைப்பு ஒன்று உருவாக்கப்படும் என்பது அசாத்தியமானது. அப்படி ஒன்று நடக்கும் என சம்பந்தனும் சுமந்திரனும் கனவு காண்கின்றார்களோ எனக்குத் தெரியாது. ஆனால், ரணில் விக்கிரமசிங்க, சம்பந்தன், சுமந்திரன் ஆகிய மூவரும் சேர்ந்து அப்படி ஒரு புதிய அரசமைப்பு வரப்போவதாக நம்பிக்கையூட்டி தமிழ் மக்களை ஏமாற்றுகின்றார்கள் என்பது நிச்சயம்.”

– இப்படித் தெரிவித்திருக்கின்றார் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ.

யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் ‘காலைக்கதிர்’ நாளிதழுக்குத் தாம் வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அவரது கொழும்பு, விஜேராம இல்லத்தில் வைத்து ‘காலைக்கதிர்’ நாளிதழ் ஆசிரியர் என்.வித்தியாதரனுக்கு நேற்று வழங்கிய இந்தச் செவ்வியில் அவர் மேலும் தெரிவித்திருப்பவை வருமாறு:-

“தமிழர்களுக்கு நியாயமான தீர்வைப் பெற்றுக் கொள்ளக்கூடிய ஓர் அருமையான வாய்ப்பு 2009 இல் யுத்தம் முடிவடைந்தபின்னர் கிட்டியது. அது குறித்துப் பேச வருமாறு சம்பந்தனை அழைத்தேன். அவர் வரவில்லை.

தமிழ்க் கூட்டமைப்பு என்னை அப்போது உதாசீனம் செய்து நடந்தமை மூலம் தமிழர் வாழ்வில் மண்ணை அள்ளிப் போட்டது.

இந்த அரசுக்கு அரசமைப்பை மாற்றும் ஆணை கிடையாது. அதனால், புதிய அரசமைப்பைக் கொண்டு வரவும் முடியாது. அது சாத்தியமற்றது.

இப்போதும் கூட தெற்கில் மக்கள் ஆதரவு எங்கள் பக்கம்தான். அதனைப் புரிந்து ஏற்றுக்கொள்வதற்கு கூட்டமைப்பினர் சம்பந்தனும் சுமந்திரனும் தயாரில்லை.

உங்களின் (‘காலைக்கதிர்’ பத்திரிகை ஆசிரியரின்) முன்முயற்சியில் நானே சுமந்திரனுடன் பேசினேன். இணக்கத்தை எட்ட வாய்ப்புகள் இருந்தன. எனது பிரதிநிதியாகக் காலி மாவட்ட நாடாளுமன்ற
உறுப்பினரான டாக்டர் சுரேஷ் பத்திரனவை நான் நியமித்தேன்.

அது உங்களுக்கும் தெரியும். ஆனால் அந்த உரையாடலைக் கூட்டமைப்புத் தொடரவில்லை. அதில் ஈடுபாடு காட்டவில்லை.

இனி, இந்த நாடாளுமன்றத்தின் கீழ் புதிய அரசமைப்புக் குறித்து பேசுவதில் அர்த்தமில்லை. அதற்கு வாய்ப்பேயில்லை.

பொதுத் தேர்தலின் பின்னர் புதிய அரசு வரட்டும். அதன் கீழ் மீண்டும் முயற்சிகளை ஆரம்பிக்கலாம்.

நாங்களே எமது நாட்டுக்குள் பேசி தீர்வு காணலாம். இப்போது நடைமுறைக்கு வரமுடியாத – சாத்தியப்படாத ஓர் அறிக்கையை வைத்துக் கொண்டு தமிழ் மக்களுக்கு நாடகமாடுகின்றார் ரணில் விக்கிரமசிங்க.

அரசமைப்பு பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டது ஒரு மாதிரி நகல் வடிவம் கூட இல்லை. வெறுமனே அறிக்கைதான். இதுதான் புதிய அரசமைப்புக்கான நகல் வடிவம் என்று ரணிலினால் அறிவிக்க முடியாது.

அவர் தெற்குக்கு ஒன்றும் வடக்குக்கு ஒன்றுமாக வெவ்வேறு முகம் காட்டுகின்றார். சிங்களத்தில் ஒரு பழமொழி உண்டு. பாம்பு வந்துவிட்டது. பக்கத்தில் தடியும் இருக்கின்றது. ஆனால், “நான் விரதம்” என்று
கூறுவது என்பார்கள்.

அது போலத்தான் ரணில் விக்கிரமசிங்க இந்தப் புதிய அரசமைப்பு உருவாக்கம் தொடர்பான விடயத்தில் நடந்து கொள்கின்றார். அதை, இதைக் கூறுகின்றார்.

தமிழருக்கு ஒரு படம் காட்டுகின்றார். தெற்குக்கு ஒன்று கூறுகின்றார். ஆனால், தான் ஒரு முடிவு எடுத்து இதுதான் என்று வெளிப்படையாகக் கூற முன்வருகின்றார் இல்லை.

இப்போதும் கூட அரசமைப்புப் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் ஒரு தீர்மானம் இல்லை. தான் ஒரு வடிவத்தை – மாதிரியைப் பண்ண அவர் தயாரில்லை.

பாம்பையும் தடியையும் காட்டிக் கொண்டு அவர் தள்ளி நிற்கின்றார். களத்தில் இறங்கி இதுதான் தனது நிலைப்பாடு, தங்கள் முடிவு என்று அறிவிக்கவும், முன்வைக்கவும் அவருக்குத் திராணி இல்லை.

இந்த நாடாளுமன்றத்தில் தற்போதைய அரசின் கீழ் புதிய அரசமைப்புக்கு வாய்ப்பேயில்லை என்று நன்கு தெரிந்திருந்தும் இன்னும் சாத்தியம் உண்டு என்ற மாதிரி சம்பந்தனும், சுமந்திரனும் தமிழர்களுக்குக் கயிறு கொடுத்துக் கொண்டு இருக்கின்றார்கள்.இதனைத் தமிழ் மக்கள் நன்கு புரிந்துகொள்ள வேண்டும்” – என்று குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *