புதிய அரசமைப்பின் ஊடாக நிரந்தரத் தீர்வு அவசியம் !

சூழ்ச்சி அரசாங்கத்தை தோற்கடித்து, நாட்டின் நலனுக்காகவும், ஜனநாயகத்துக்காகவும் தம்மை அர்ப்பணித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அரசியல் ரீதியான கோரிக்கைகளை புதிய அரசமைப்பின் ஊடாக அரசாங்கம் நிறைவேற்ற வேண்டும் –

என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் கண்டிமாவட்ட எம்.பியுமான வேலுகுமார் வலியுறுத்தினார்.

பாராளுமன்றத்தில் இன்று (09) புதன்கிழமை நடைபெற்ற இரசாயன ஆயுதங்கள் சமவாயம் ( திருத்தச்) சட்டமூலம்மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு வலியுறுத்தினார்.

இதுதொடர்பாக அவர் மேலும் கூறியவை வருமாறு,

” நாட்டில் 30 வருடங்களுக்கு மேலாக உள்நாட்டு போர் நடைபெற்றது. அதனால் ஏற்பட்ட விளைவுகளுக்கும் முகங்கொடுக்கவேண்டி ஏற்பட்டது. தற்போது போர் முடிவடைந்து  10 ஆண்டுக்கு மேலாக மீண்டெழுவதற்கு முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.

ஏன் போர் ஏற்பட்டது? என்பதற்கான காரணங்களை கடந்தகாலங்களில் கற்றரிந்துகொண்டோம். எனவே, கற்றுக்கொண்ட படிப்பினைகளை அடிப்படையாகக்கொண்டு வடக்கு, கிழக்கு மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகாணப்படவேண்டும். அம்மக்களின் அபிலாஷைகள் இனங்காணப்பட்டு அவை நிறைவேற்றப்படவேண்டும்.

எனினும், போர் முடிவடைந்தப்பின்னர் உடனடியாக முன்னெடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் கடந்த காலங்களில் முன்னெடுக்கப்பட்டனவா?  நல்லிணக்கமும், சமாதானமும் பிறந்துள்ளனவா? இது விடயத்தில் காத்திரமான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு இரு அரசாங்கங்களும் தவறியுள்ளன என்றே கூறவேண்டும்.

அதேவேளை, போரால் பெரிதும் பாதிக்கப்பட்ட வடக்கு மாகாணத்தில் தற்போது வறட்சியும், வெள்ள அனர்த்தமும் என இயற்கை அனர்த்தங்கள் ஏற்பட்டுவருகின்றன. அப்பகுதி முன்னேற்றத்துக்கு இதுவும் பெரும் பின்னடைவை ஏற்படுத்துகின்றது. எனவே, அரசாங்கம் இது குறித்தம் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

அதேபோல் நாட்டில் அண்மையில் அரசியல் குழப்பம் ஏற்பட்டபோது, நாட்டின் நலன்கருதி, ஒரு சட்டவரையறைக்குள் இருந்து நல்லாட்சிக்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமது முழு பங்களிப்பையும் வழங்கியது.

 

அதாவது, நீதி, நியாயம், ஜனநாயகத்துக்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தம்மை முழுமையாக அர்ப்பணித்தனர். எனவே, புதிய அரசமைப்பை இயற்றி, நிரந்தரமானதொரு அரசியல் தீர்வைகாண அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும்.” என்றார் வேலுகுமார் எம்.பி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *