மைத்திரிக்கு விரைவில் தக்க பாடம் புகட்டுவேன்! – சந்திரிகா ஆவேசம்

“ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சர்வாதிகாரம் அரசியல் அரங்கில் மட்டுமல்ல ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள்ளும் தொடர்கின்றது. அவரின் நடவடிக்கைகளுக்கு விரைவில் தக்க பாடம் புகட்டுவேன். ஒருபோதும் அவருக்கு மன்னிப்பு வழங்கமாட்டேன்.”

– இவ்வாறு முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆலோசகருமான சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

“ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை எனது தந்தையும் தாயும் நானும் பாடுபட்டு வளர்த்தோம். இந்தக் கட்சியைத் தலைநிமிரச் செய்தோம். நாட்டின் ஆட்சியைத் தீர்மானிக்கும் கட்சியாக இதனை வைத்திருந்தோம்.

ஆனால், இந்தக் கட்சியை இன்று நாசமாக்கிவிட்டார் மைத்திரி. முதலாவது நிலைக்கு நின்ற எனது தாய்க்கட்சி மைத்திரியின் சர்வாதிகார நடவடிக்கைகளினால் மூன்றாம் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

கட்சியில் எனக்கு ஆதரவானவர்கள் வகித்த பதவிகளைப் பறித்தெடுத்துவிட்டு தனக்குப் பிடித்தமான – பொருத்தமில்லாத நபர்களுக்குப் பதவிகளை வழங்கியுள்ளார் மைத்திரி.

வெளிநாடு செல்லும்போது கட்சியின் தலைமையகத்தை அவர் பூட்டிவிட்டுச் சென்றுள்ளார். இது அவரின் சர்வாதிகாரத்தின் உச்சநிலையைத் தொட்டுக் காட்டுகின்றது.

மைத்திரியின் இந்த நடவடிக்கைகளுக்கு விரைவில் உரிய பாடம் புகட்டுவேன். ஒன்றில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை மீட்டெடுப்பேன். அல்லது கட்சியில் உள்ள எனது ஆதரவாளர்களை மீட்டெடுத்து அடுத்தகட்ட நடவடிக்கை தொடர்பில் தீர்மானம் எடுப்பேன்” – என்றார்.

வெளிநாட்டு செய்தி நிறுவனத்தின் இலங்கை செய்தியாளருக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியிலேயே சந்திரிகா மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *