எதிர்க்கட்சித் தலைவருக்கான சமரில் மஹிந்த வெற்றி – வெளியேறுகிறார் சம்பந்தன்!

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராக மஹிந்த ராஜபக்சவே செயற்படுவார் என்று சபாநாயகர் கருஜயசூரிய இன்று ( 04) அறிவித்தார்.

நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படும் அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கான கூட்டம் சபாநாயகர் கருஜயசூரிய தலைமையில் இன்று முற்பகல் சபாநாயகர் அலுவலகத்தில் நடைபெற்றது.

இதன்போது 8 ஆம் திகதிக்குரிய சபை நடவடிக்கைகள் சம்பந்தமாக விரிவாக ஆராயப்பட்டுள்ளன.

அதன்பின்னர் எதிர்க்கட்சித் தலைவர் பதவி தொடர்பில் தனது நிலைப்பாட்டை சபாநாயகர் அறிவித்தார்.

” ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி கூட்டரசிலிருந்து விலகியுள்ளதால் அம்முன்னணியால் பெயரிடப்படும் நபருக்கே எதிர்க்கட்சித் தலைவர் பதவி வழங்கப்படவேண்டும்.

அந்தவகையில் மஹிந்த ராஜபக்சவின் பெயர் பிரேரிக்கப்பட்டுள்ளது. அது ஏற்றுக்கொள்ளப்படும். அத்துடன், எதிர்க்கட்சிப் பிரதம கொறடாவாக மஹிந்த அமரவீர செயற்படுவார்.” என்று குறிப்பிட்டார்.

நாடாளுமன்றத்தில் எதிர்வரும் 8 ஆம் திகதி சபாநாயகர் அறிவிப்புவேளையில் இது தொடர்பில் சபாநாயகர் உத்தியோகபூர்வமாக அறிவிக்கவுள்ளார்.

‘சூழ்ச்சி அரசு’ கவிழ்க்கப்பட்ட பின்னர் மஹிந்தவை எதிர்க்கட்சித் தலைவராக சபாநாயகர் நியமித்தார்.  எனினும், ஐக்கிய தேசியக்கட்சி, ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகியன சபாநாயகரின் முடிவை ஆட்சேபித்திருந்தன.

இந்நிலையிலேயே மஹிந்தவுக்கான பதவியை சபாநாயகர் உறுதிப்படுத்தியுள்ளார். இதனால், எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகம், இல்லம் ஆகியவற்றிலிருந்து சம்பந்தன் வெளியேறவேண்டியுள்ளது.

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *