இராணுவத்தின் ஆக்கிரமிப்பிலிருக்கும் காணிகள் மீள்கின்றன ஜனவரி மாதம்!

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இராணுவத்தினரால் தற்போது பயன்படுத்தப்படும் அரச மற்றும் தனியார் காணிகளை விடுவிப்பதற்கு இராணுவம் நடவடிக்கை எடுத்துள்ளது.

தேசிய பாதுகாப்புக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில் இவை ஜனவரி மாத இரண்டாம் வாரத்தில் விடுவிக்கப்படும் என்று இராணுவத் தலைமையகம் தெரிவித்துள்ளது.

இதற்கு மேலதிகமாக அந்த மாகாணங்களில் இராணுவத்தால் நடத்தப்பட்டு வரும் பண்ணைகளில் உள்ள அரசுக்குச் சொந்தமான காணியையும் துரிதமாக விடுவிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆலோசனைக்கு அமைவாக இதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என்று இராணுவம் அறிவித்துள்ளது.

இதற்கமைய வடக்கு மாகாண விவசாயப் பண்ணை அமைந்துள்ள ஆயிரத்து 99 ஏக்கர் காணியை விடுப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.

ஜனவரி மாத இரண்டாம் வாரத்தில் இந்தக் காணிகள் விடுவிக்கப்படும்.

இதற்கமைய கிளிநொச்சி மாவட்டத்தில் பூநகரி பிரதேச செயலாளர் பிரிவில் ஜயபுரம் வடக்கு கிராம உத்தியோகத்தர் பிரிவுக்கு உட்பட்ட வனப்பாதுகாப்புத் திணைக்களத்திற்குச் சொந்தமான 194 ஏக்கர் விடுவிக்கப்படவுள்ளது.

இதேபோன்று கிளிநொச்சி மாவட்டத்தில் பூநகரி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட ஜயபுரம் வடக்கு கிராம சேவகர் பிரிவில் அமைந்துள்ள 285 ஏக்கர் காணியும், முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட உடையார் கட்டுக்குளம் கிராம உத்தியோகத்தர் பிரிவுக்குட்பட்ட வனப்பாதுகாப்புத் திணைக்களத்திற்குச் சொந்தமான 120 ஏக்கரும், மன்னார் மாவட்டத்தில் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வெள்ளங்குளம் கிராம உத்தியோகத்தர் பிரிவுக்குட்பட்ட வனப்பாதுகாப்பு திணைக்களத்திற்குச் சொந்தமான 600 ஏக்கர் காணியில் 500 ஏக்கர் காணியும் விடுவிக்கப்படவுள்ளதாக இராணுவத் தலைமையகம் அறிவித்துள்ளது.
.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *