ஐ.தே.க. அரசின் யோசனைக்கு மஹிந்த போர்க்கொடி!

தேசிய அரசு என்ற போர்வையில் அமைச்சுகளின் எண்ணிக்கையை அதிகரித்துக்கொள்வதே அரசின் நோக்கமாக இருக்கின்றது – என்று எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச இன்று (02) சுட்டிக்காட்டினார்.

தேசிய அரசொன்றை அமைக்கும் யோசனையை ஐக்கிய தேசியக்கட்சியின் உப தலைவரான  சபை முதல்வர் அமைச்சர் லக்ஸ்மன் கிரியல்ல, நாடாளுமன்ற செயலாளரிடம் நேற்று (01) கையளித்தார்.

மேற்படி யோசனையை விவாதத்துக்கு எடுப்பது தொடர்பில் எதிர்வரும் 05 ஆம் திகதி காலை சபாநாயகர் கருஜயசூரிய தலைமையில் நடைபெறவுள்ள கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் முடிவெடுக்கப்படும்.

இந்நிலையில், ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தின் குறித்த நடவடிக்கைக்கு எதிர்ப்புகள் வலுத்துவருகின்றன.

” ஐக்கிய தேசியக் கட்சியின் பங்காளிக்கட்சியாகவே முஸ்லிம் காங்கிரஸ் இருக்கின்றது. இந்நிலையில், அக்கட்சியின் ஒரு  உறுப்பினருடன் இணைந்து தேசிய அரசமைக்க முற்படுவது அநீதியாகும்.

அமைச்சுகளின் எண்ணிக்கையை அதிகரித்துக்கொள்வதே இதன் நோக்கமாகும்.” என்று கூட்டு எதிரணி உறுப்பினர்கள் சுட்டிக்காட்டினர்.

எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச இன்று கண்டி தலதாமாளிகைக்கு பயணம் மேற்கொண்டு, அல்கிரிய மற்றும் மல்வத்த பீடங்களின் மகாநாயக்க தேரர்களை சந்தித்து ஆசி பெற்றார்.

அதன்பின்னர், இவ்விவகாரம் தொடர்பில் ஊடகவியலாளர்கள் அவரிடம் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த அவர்,

”  அரசியலமைப்பினை காப்போம் , ஜனநாயகத்தை பாதுகாப்போம் என மார்த்தட்டி, பத்திரிகை, தொலைக்காட்சிகளில் பிரசாரம் செய்தவர்கள், இப்பொழுது அமைச்சர்களின் எண்ணிக்கையினை அதிகரிக்க பாடுபடுகின்றனர்.

அவ்வாறு அமைச்சர்களின் எண்ணிக்கையை அதிகரித்து 113 உறுப்பினர்களின் ஆதரவினைத் திரட்டவே முயற்சிக்கின்றனர். இதுவொரு கேலிக்கூத்தாகும்.” என்றார்.

அதேவேளை, 5 ஆம் திகதி நடைபெறவுள்ள கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தமது எதிர்ப்பினை மஹிந்த அணி உத்தியோகப்பூர்வமாக வெளியிடவுள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *