தொண்டாவை விமர்சிக்க கூட்டுஒப்பந்தத்தை ஆயுதமாக்காதீர்! திகா அணிக்கு இ.தொ.கா. சவால் விடுப்பு!!

முதலாளிமார் சம்மேளனத்தின் இழுத்தடிப்புக்கு கூட்டு ஒப்பந்தம் தான் காரணமா? என்பதை அமைச்சர் திகாம்பரம் காரணகாரியங்களுடன் தெளிவுபடுத்த வேண்டும் என இலங்கை தொழிலாளர் காங்கிரசின் உப தலைவர் கணபதி கனகராஜ் வலியுறுத்தியுள்ளார்.


இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில்,

கூட்டு ஒப்பந்தத்திலிருந்து வெளியேறினால் மட்டுமே தான் அரசாங்கத்துடன் பேசி அல்லது எல்லோரும் சேர்ந்து போராடி சம்பளத்தை பெறமுடியும் என்ற நிலைப்பாட்டை அமைச்சர் திகாம்பரம் வெளிப்படுத்தியுள்ளார்.

வேலைநிறுத்தம் ஆரம்பித்தப்போது நிலையான அரசாங்கமொன்று இல்லாததனால் வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு தம்மால் ஆதரவு தரமுடியாதென்றும்,

தமது நிலையான அரசாங்கம் வந்தவுடன் நியாயமான சம்பளத்தை பெற்றுத்தருவதாகவும் தெரிவித்திருந்த அமைச்சர் தற்போது முன்னுக்கு பின் முரணான கருத்தை வெளியிடுகின்றார்.

கூட்டு ஒப்பந்த்ததை காரணங்காட்டி சம்பள விடயத்தில் நழுவல் போக்கை கையாளுவதாகவே அமைச்சரின் கருத்து அமைந்துள்ளது.

கடந்த நான்கு மாதங்களாக தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வை வலியுறுத்தி பல்வேறு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

அமைச்சர் திகாம்பரம் தலவாக்கலையில் பெருந்தோட்ட கம்பனிகளுக்கு அழுத்தம் கொடுக்கும் ஆர்ப்பாட்டம் செய்தபோதும் இந்த கூட்டு ஒப்பந்தம் நடைமுறையில் இருந்தது.

கடந்த பொது தேர்தலின்போது தலவாக்கலையில் நடைபெற்ற பொது கூட்டத்தில் தற்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தோட்டத் தொழிலாளருக்கு ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பை பெற்றுக்கொடுப்பதாக கூறிய போதும் இந்த கூட்டு ஒப்பந்தம் நடைமுறையில் இருந்தது.

பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பளத்தை தீர்மானிக்கின்ற கூட்டு ஒப்பந்த முறையை கைவிடுவதற்கு பெருந்தோட்ட கம்பனிகள் அதிக விருப்பம் கொண்டுள்ளன.

அது அவர்களின் தொழிலாளர் விரோத நோக்கத்தை நிறைவேற்றிக்கொள்வதற்கு கையாளும் உபாயமாகும்.

ஆனால் அமைச்சர் திகாம்பரத்தின் அணியினரும் அவ்வாறான நிலைப்பாட்டில் இருக்கின்றனர். அதுமட்டுமல்லாமல் மலையகத்தில் புதிதாக அரசியல் செய்வதில் ஆர்வம் கொண்டுள்ளவர்களும் இதைத்தான் கூறுகின்றனர்.

அதாவது கூட்டு ஒப்பந்தம் பலருக்கு அரசியல் பேசுவதற்கான மேடையாகியுள்ளது. இலங்கை தொழிலாளர் காங்கிரசையும், தலைவர் ஆறுமுகன் தொண்டமானையும் அவமானப்படுத்தி அதன் மூலம் அரசியல் ஆதாயம் தேடுவதற்கு கூட்டு ஒப்பந்தத்தை ஒரு சிறந்த விளம்பர ஊடகமாக மாறியுள்ளது.

கூட்டு ஒப்பந்தத்தை விட தோட்டத் தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வை பெற்றுக்கொடுக்கும் சிறந்த முறை ஒன்றை எவராவது முன்வைத்தால் அதையும் பரீசீலணை செய்வதற்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தயாராகவே இருக்கிறது.

அதற்காக பழைய சம்பள நிர்ணய சபை முறையை தூசு தட்டுவதால் அது கூட்டு ஒப்பந்த முறையைவிட மோசமான நிலைக்கு தொழிலாளர்களை கொண்டு சென்றுவிடும்.

பெருந்தோட்ட கம்பனிகளும் கூட்டு ஒப்பந்த பொறியிலிருந்து தப்பிச்செல்லவே முனைப்பு காட்டுகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *