அரசியல் நெருக்கடியால் 28 நாட்களில் ரூ. 72 ஆயிரம் கோடி இழப்பு

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, புதிய பிரதமராக மகிந்த ராஜபக்ச நியமித்ததுடன் ஏற்பட்ட அரசியல் நெருக்கடி காரணமாக நாட்டில் ஏற்பட்டுள்ள ஸ்திரமற்ற நிலைமையால், ஏற்பட்டுள்ள பொருளாதார இழப்பு 72 ஆயிரம் கோடி ரூபாயையும் (720 பில்லியன்) தாண்டியுள்ளதாக பொருளாதார மற்றும் நிதித்துறை ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு வழங்க இணங்கிய 1.85 பில்லியன் டொலர் தவணை கடன், அமெரிக்கா வழங்க இணங்கிய 490 மில்லியன் டொலர் நிதியுதவி மற்றும் ஜப்பான் வழங்க இணங்கிய 1.4 பில்லியன் டொலர் கடனுதவி என்பன தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன.

இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி மற்றும் ஸ்திரமற்ற நிலைமை காரணமாக வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இலங்கை பங்குச் சந்தையில் முதலீடு செய்திருந்த 3 ஆயிரம் கோடி ரூபாயை திரும்ப பெற்றுள்ளனர். அத்துடன் சுற்றுலாத்துறை ஏற்பட்டுள்ள இழப்பு 10 ஆயிரம் கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் அமெரிக்க டொலர் ஒன்றுக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி 180 ரூபாயாக உயர்ந்துள்ளதுடன் தொடர்ந்தும் ரூபாயின் பெறுமதி வீழ்ச்சியடைந்து வருகிறது.

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று வீதங்களுக்கு அமைய அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 180.66 ரூபாய், கொள்முதல் விலை 176.72 ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மாதத்தில் மாத்திரம் அமெரிக்க டொலர் ஒன்றின் விலை 4.55 வீதமாக அதிகரித்துள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *