இலவச கருத்தரங்கு நடத்தி வசூலிப்பில் இறங்கிய ஆசிரியர் கைது!

தேசிய மொழியுரிமை தொடர்பான செயலமர்வு இலவசமாக இடம்பெறுமென்று அறிவிப்பு விடுத்து,  பங்குபற்றுனர்களிடம் பெருந்தொகை பணத்தை மோசடி செய்த ஆசிரியரொருவரை, மகியங்கனைப் பொலிசார் இன்று கைதுசெய்தனர்.

ஜனாதிபதி செயலகத்தினால் நடைமுறைப்படுத்தப்படுவதாக கூறப்பட்ட போலி சுற்றறிக்கையொன்றினை பயன்படுத்தி, ஆசிரியர் ஒருவர் மகியங்கனை பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் 17-11-2018ல் தேசிய மொழியுரிமை தொடர்பான செயலமர்வினை நடாத்தினார்.

இச்செயலமர்வில், ஐநூறு இளைஞர், யுவதிகள் பங்குகொண்டிருந்தனர். இவர்கள் அனைவருக்கும், மேற்குறிப்பிட்ட போலி சுற்றறிக்கை பிரதிகளுடன், செயலமர்விற்கான அழைப்பிதழ்களும் அனுப்பப்பட்டிருந்தன.

இச் செயலமர்வு முற்றிலும் இலவசமாக நடைபெறுமென்றும் அழைப்பிதழில் குறிப்பிடப்பட்டிருந்தது.

ஆனால், இச் செயலமர்வினை நடாத்திய ஆசிரியர், மொழி பெயர்ப்பும் அதைத் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் வேலைத்திட்டங்களுக்கு ஆறாயிரம் ரூபா என்றடிப்படையில் பணம் செலுத்தப்படல் வேண்டுமென்றும், செயலமர்வில் பங்குபற்றுனர்களிடம் கோரிக்கை விட்டிருந்தார்.

இக் கோரிக்கையின் பிரகாரம் பலர் பணம் செலுத்தி, ரசீதுகளையும் பெற்றனர். அத்துடன் தேசிய மொழி உரிமை குறித்த இலச்சினை பொறிக்கப்பட்ட “டீ சேட்” டுக்கள் வழங்கப்படுவதால், அச் “டீசேட்” டிற்கு ஒருவர் எழுநூறு ரூபா செலுத்தப்பட வேண்டுமென்றும் அவ் ஆசிரியர் தெரிவித்தார்.

ஆசிரியரின் இக் கோரிக்கைகள் குறித்து சந்தேகம் கொண்ட சிலர், விடயம் குறித்து, மகியங்கனைப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கு தகவல்களை வழங்கினர். இதையடுத்து, பொலிசார் குறிப்பிட்ட ஆசிரியரை விசாரணைக்குற்படுத்தி, அவரைக் கைது செய்தனர். ஜனாதிபதி செயலகத்தினால், இத்தகைய செயலமர்வொன்று நடாத்தப்படவில்லையென்றும், செயலமர்வு குறித்த சுற்றறிக்கையும் போலியானதென்றும் ஜனாதிபதி செயலகத்தினால் பொலிசாருக்கு அறிவிக்கப்பட்டிருக்கின்றது.

இதன் பின்னர், குறிப்பிட்ட கைது செய்யப்பட்ட ஆசிரியர் விசாரணைகள் நிறைவுற்ற பின் மகியங்கனை மஜிஸ்ரேட் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படுவாரென்று பொலிசார் தெரிவித்தனர்.

பதுளை நிருபர்

எம். செல்வராஜா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *