எதிர்க்கட்சித் தலைவரானார் மஹிந்த! கூட்டமைப்பு, ஐ.தே.க., மு.கா. எதிர்ப்பு!! – வெள்ளியன்று இறுதி முடிவு

நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவராக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நியமிக்கப்பட்டுள்ளார்.

நாடாளுமன்ற மரபுகளுக்கு அமைய, அதிக ஆசனங்களைக் கொண்ட எதிர்க்கட்சி என்ற வகையில், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியைச் சேர்ந்த மஹிந்த ராஜபக்ஷ எம்.பியை எதிர்க்கட்சித் தலைவராக நியமிப்பதாக சபாநாயகர் இன்று அறிவித்தார்.

நாடாளுமன்றம் இன்று பிற்பகல் ஒரு மணிக்கு கூடியபோதே, சபாநாயகர் கரு ஜயசூரிய இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

இதனால், எதிர்க்கட்சித் தலைவராக இருந்த இரா.சம்பந்தன் பதவியிழந்துள்ளார்.

முன்னதாக ஜனாதிபதி செயலகத்தில் இன்று முற்பகல் நடந்த ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் மஹிந்த ராஜபக்ஷவை எதிர்க்கட்சித் தலைவராக நியமிப்பது என்று முடிவு செய்யப்பட்டது.

இதையடுத்து, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த முடிவை சபாநாயகருக்கு அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, எதிர்க்கட்சித் தலைவராக மஹிந்த ராஜபக்ஷ நியமிக்கப்பட்டதையடுத்து சபையில் கடும் எதிர்ப்புகள் கிளம்பின. சபை முதல்வரும் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினருமான லக்ஷ்மன் கிரியெல்ல, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் எம்.பி., ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேரா ஆகியோர் இதற்குக் கடும் எதிர்ப்பை ​வெளியிட்டனர்.

“மஹிந்த ராஜபக்ஷ அண்மையில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியிலிருந்து ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியில் தனது சகாக்களுடன் இணைந்து கட்சி உறுப்புரிமையைப் பெற்றுள்ளார். இதனால் அவரது நாடாளுமன்ற உறுப்பினர் பதவி இழக்கப்படுகின்றது. எனவே, நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இழக்கும் ஒருவருக்கு – ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியிலிருந்து வெளியேறிய ஒருவருக்கு அக்கட்சியின் பெயரில் எதிர்க்கட்சித் தலைவர் பதவி வழங்குவதை ஏற்க முடியாது” என்று அவர்கள் சுட்டிக்காட்டினர்.

நாடாளுமன்றத் தெரிவுக்குழுவை அமைத்து அதனூடாக எதிர்க்கட்சித் தலைவர் பதவி விவகாரத்துக்குத் தீர்வு காணுமாறும் சபாநாயகரிடம் அவர்கள் வலியுறுத்தினர்.

கூட்டமைப்பின் எம்.பி. சுமந்திரன் அரசமைப்பின் சரத்துக்களை எடுத்துக்காட்டி நீண்ட நேரம் கடும் எதிர்ப்பை வெளியிட்டார்.

இந்த விவகாரத்துக்கு தெரிவுக்குழு மூலமே தீர்வு காணப்பட வேண்டும் என மீண்டும் மீண்டும் அவர் வலியுறுத்தினார்.

இதையடுத்து எதிர்க்கட்சித் தலைவர் பதவி விவகாரம் தொடர்பான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாட்டை எழுத்து மூலம் தன்னிடம் தருமாறும், எதிர்வரும் வெள்ளிக்கிழமை அது தொடர்பான தீர்மானத்தை சபையில் தான் அறிவிப்பதாகவும் சபாநாயகர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *