அதிகார ஆசையை மறைக்கவே ‘சமஷ்டி’ நாடகத்தை அரங்கேற்றுகிறார் மஹிந்த ! மனோ விளாசல்

புதிய சமஷ்டி முறையிலான பிரிவினை அரசியலமைப்பு வருவதை தடுக்கவே, தான் ஆட்சியை கைப்பற்றியதாக மஹிந்த இன்று கூறுகிறார். இது ஒரு தந்திரமான போலித்தனமும், கேலித்தனமும் நிறைந்த கட்டுக்கதை என்று தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் மேலும் கூறியவை வருமாறு,

வாசுதேவ நாணயக்கார முதல் முறை மைத்திரியிடம் உரையாடி விட்டு, என்னிடம் வந்து பிரதமர் பதவியை ஏற்க சொன்னார். நான் வேண்டாம் என்றேன். இரண்டாம் முறையும் வந்தார். அப்போது அதை ஏற்றுக்கொண்டேன். எங்கள் மீதான வழக்குகளை தடுக்கவே நான் பதவியை கைப்பற்றினேன் என இன்று கூறுகிறார்கள். அது உண்மை இல்லை என மகிந்த கூறுவதுதான் உண்மை இல்லை.

இரண்டாம் முறை மைத்திரியிடம் உரையாடி விட்டு வாசுதேவ நாணயக்கார என்னிடம் வந்து பிரதமர் பதவியை ஏற்க சொன்ன போது அதை நான் ஏற்றுகொண்டதன் காரணம், ரணில் அரசாங்கம், ஒரு புதிய சமஷ்டி பிரிவினை அரசியலமைப்பு ஒன்றை கொண்டுவர இருந்தது. அதை தடுக்கவே நான் பிரதமர் பதவியை ஏற்று ஆட்சியை கைப்பற்றினேன் என்று மகிந்த இன்று நடிகர் வடிவேலு மாதிரி நகைச்சுவை செய்கிறார்.

இத்தகைய ஒரு காரணத்தை கூறி, தன பதவி ஆசையை மறைக்க மஹிந்த ராஜபக்ச முயற்சி செய்கிறார். பதவி அதிகாரத்தை பெற்று தங்கள் குடும்ப அங்கத்தவர் மீதான வழக்குகளை தடுக்க முயற்சி செய்வதை, இன்று மறைக்க வெட்கமில்லாமல், இனவாதத்தையும் தூண்டி விடும் கருத்தை கூறுகிறார்.

உண்மையில் இங்கே ஒரு புது அரசியலமைப்போ, ஒரு வரைபோ கூட கிடையாது. ஆக, வழிகாட்டல்குழுவிலுள்ள மஹிந்த பிரதிநிதிகளான தினேஷ் குணவர்த்தன, பிரசன்ன ரணதுங்க ஆகியோரின் கருத்துகளையும், எங்கள் கருத்துகளையும்  உள்ளடக்கிய ஒரு இடைக்கால அறிக்கை மட்டுமே உண்டு.

வழிகாட்டல் குழு உறுப்பினர் என்ற முறையில் கூறுவேன். சமஷ்டியை விடுத்து, முதலில் புது அரசியலமைப்பே ரொம்ப தூரத்தில் இருக்கின்றது. மேலும் மூன்று வருடங்கள் பேச்சில் போய்விட்டன. அப்படியே அது வந்தாலும், அது சபையில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற வேண்டும். அடுத்தது, நாட்டில் அபிப்பிராய வாக்கெடுப்பை நடத்தி அதில் வெற்றி பெறவும் வேண்டும். சிங்கள மக்கள் மத்தியில் சென்று வாக்கெடுப்பு நடத்தி, அதன்மூலம் வரும் எந்த ஒரு தீர்வையே நாம் ஏற்போம். அதுவே நிரந்தரமானது என எதிர்க்கட்சி தலைவர் சம்பந்தனும் கூறியுள்ளார்.

ஆகவே, மகிந்த கூறுவது போல் சமஷ்டிமுறை பிரிவினை அரசியலமைப்பு ஒருவேளை வந்தாலும்கூட  அதை தடுக்க,மகிந்த ராஜபக்சவுக்கு எத்தனையோ வழிகள் இருக்கின்றன. இந்நிலையில், “இதோ, சமஷ்டி வருகிறது, அதோ பிரிவினை வருகிறது” எனக்கூறி, ஆட்சியை பிடிக்கும் தன் அதிகார ஆசையை மறைக்க ஒரு தந்திரம் நிறைந்த கதையை மகிந்த இப்போது அவிழ்த்து விட்டுள்ளார்.  அதன்மூலம் சிங்கள மக்களையும் தூண்டி விடுகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *