என்னிடம் 6 கோடி முதல் 50 கோடி வரை மஹிந்த அணியால் பேரம் பேசப்பட்டது! – போட்டுடைத்தார் சாந்தி எம்.பி.

தமிழ்த் தரப்புக்களிடம் மண்டியிடும் நிலையில் தேசிய கட்சிகள் உள்ளன எனவும், 6 கோடி முதல் 50 கோடி ரூபா வரை தன்னிடம் மஹிந்த அணியினர் பேரம் பேசினார்கள் எனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட கூழாமுறிப்பு பகுதியில் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையில் அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:-

“இலங்கையின் அரசியல் வரலாற்றிலே சிறுபான்மை இனம் என்று தமிழர்களை ஓரங்கட்டிய சிங்கள அரசியல்வாதிகள் இன்று தமிழினத்திடம் மண்டியிடுகின்ற ஒரு நிலை வந்துள்ளது.

இவ்வாறு ஒரு நிலை ஏற்படும் என்று மஹிந்த ராஜபக்ஷ நினைத்திருப்பாரா?

மஹிந்த ராஜபக்ஷ எங்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களை விலைக்கு வாங்குகின்ற வகையில் பேரம் பேசுகின்ற நிலை தனக்கு ஏற்படும் என்று நினைத்திருக்கவேமாட்டார்.

இவர் என்ன விலை கொடுக்க முடியும் எமது தமிழ் இனத்துக்காக? தங்கள் இன்னுயிர்களை ஈர்த்த எங்கள் தியாகிகளுக்கு என்ன விலை கொடுக்க முடியும்? இது ஒரு தாய் மனத்தினுடைய கண்ணீர். ஒரு தாயினுடைய மன உக்கிரம் தான் இன்று மஹிந்தவை மண்டியிட வைத்திருக்கிறது.

அதுமட்டுமல்ல தமிழினம் தங்களுக்குத் தேவையில்லை. அவர்கள் சிறுபான்மை இனம் என்று ஓரங்கட்டி வைத்திருந்த தேசிய கட்சிகள் அனைத்துமே இன்று தமிழர்களையே நம்பியிருக்கின்றன. இந்தத் தமிழர்கள் ஆணையிட்டு அனுப்பி வைத்திருக்கின்ற கூட்டமைப்பை நம்பியே அவர்கள் இன்று ஆட்சிப்பீடம் ஏறவேண்டிய நிலை வந்துள்ளது.

ஏனைய உறுப்பினர்களிடம் எவ்வளவு பணம் பேரம் பேசப்பட்டது என எனக்கு தெரியாது. ஆனால், என்னிடம் 6 கோடி முதல் 50 கோடி ரூபா வரை மஹிந்த அணியினரால் பேரம் பேசப்பட்டது” – என்று குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *