கொடூரமாகத் தமிழரைக் கொன்றொழித்தோர் மீண்டும் ஆட்சிக்கு வர நாங்கள் இடமளிப்பதா? – பிரேரணையைத் தோற்கடிக்க இதுவே காரணம் என்கிறார் சம்பந்தன்

“தமிழ் மக்களை அடிமைப்படுத்தி – துன்புறுத்திக் கொடூரமான முறையில் கொன்றழித்தவர்கள் மீண்டும் ஆட்சிக்கு வர நாம் இடமளிப்பதா? மீண்டுமொரு சர்வாதிகார – நாசகார ஆட்சிக்கு நாம் ஒத்துழைப்பதா? இதனைக் கருத்தில்கொண்டுதான் தற்போதைய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு எதிராக நாம் வாக்களித்தோம்; அதனைத் தோற்கடித்தோம்.”

– இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

அரசுக்கு எதிராக சமர்ப்பிக்கப்பட்டிருந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 14 நாடாளுமன்ற உறுப்பினர்களினதும் எதிர்ப்பால் தோற்கடிக்கப்பட்டது. கூட்டமைப்பின் இந்த நடவடிக்கை தொடர்பில் அதன் தலைவர் இரா.சம்பந்தன் ‘புதுச்சுடர்’ செய்திச் சேவையிடம் கருத்துத் தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“நம்பிக்கையில்லாப் பிரேரணை மூலம் ஓர் அரசு தோற்கடிக்கப்பட்டால் இன்னோர் அரசு ஆட்சிக்கு வரும். அப்படியானால் தற்போதைய நிலைமையில் எந்த அரசு ஆட்சிக்கு வரும் என்று எமக்கு நன்றாகத் தெரியும்.

அந்த அரசு கடந்த காலத்தில் ஆட்சி செய்த அரசாகத்தான் உள்ளது. அந்த ஆட்சியில் தமிழர்களுக்கு நன்மைகள் ஏற்பட்டதா? அல்லது தீமைகள் ஏற்பட்டதா? என்பதை நாம் சிந்தித்துப் பார்த்தோம்.

அந்த அரசின் ஆட்சியில் தமிழர்கள் வார்த்தைகளில் சொல்ல முடியாத துயரங்களை அனுபவித்தார்கள். தமிழ் மக்களை அடிமைப்படுத்தி – துன்புறுத்திக் கொடூரமான முறையில் கொன்றழித்தவர்கள் மீண்டும் ஆட்சிக்கு வர நாம் இடமளிப்பதா? மீண்டுமொரு சர்வாதிகார – நாசகார ஆட்சிக்கு நாம் ஒத்துழைப்பதா? இதனைக் கருத்தில்கொண்டுதான் தற்போதைய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு எதிராக நாம் வாக்களித்தோம்; அதனைத் தோற்கடித்தோம்.

தற்போது ஆட்சியிலுள்ள அரசு மீது எமக்கும் எமது மக்களுக்கும் நம்பிக்கையில்லை. இந்த அரசு மீது பல விமர்சனங்கள் உள்ளன. எனினும், கடந்த அரசைவிட இந்த அரசு எமது மக்களுக்கு சில நன்மையளிக்கும் கருமங்களைச் செய்து வருகின்றது.

அதேவேளை, எமது மக்களின் அடிப்படைப் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும் என்பதில் இந்த அரசின் தலைமை உறுதியாக உள்ளது. சில விடயங்களைத் தீர்த்துவைப்பதாக இந்த அரசின் தலைமை எமக்கு நேரில் உறுதிமொழிகளைத் தந்தது.

இன்னமும் ஒரு வருடத்துக்குள் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. அதற்குள் இந்த அரசின் ஊடாக தமிழர் நலன் சார்ந்த கருமங்களை செய்து முடிக்க வேண்டும். இதனையும் கருத்தில்கொண்டுதான் இந்த அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையைத் தோற்கடித்தோம்” – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *